சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களை கணக்கிடும் முறையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
சிபிஎஸ்இ தேர்வை எதிர்த்து 1152 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 10,11,12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் +2 மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் அங்கீகாரம் அளித்தது. மேலும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீட் தேர்வு நடத்துவது குறித்து தேர்வு முகமையே முடிவெடுக்கும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
முன்னதாக, ‘கொரோனா சூழலில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது என்பது நிச்சயம் முடியாத ஒன்று. மாணவர்களின் உயிர் என்பது விலைமதிப்பற்றது. இக்கட்டான சூழலில் மாணவர்களை தேர்வு எழுதத் சொல்லி நிர்பந்திக்க முடியாது. தேர்வு எழுதும் மாணவருக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், அது சிக்கலை உண்டாக்கிவிடும். சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியானதே’ என மத்திய அரசு பதில் அளித்தது. இதனைத் தொடர்ந்து, அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டபுள் மாஸ்க் அணியவித்து சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்களின் ஒரு தரப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் மற்றும் பல தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில், இந்தாண்டு 12-ஆம் வகுப்புக்கான வாரியத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், நன்கு வகுக்கப்பட்ட மதிப்பீடுகள் மூலம், நியாயமான முறையில் தேர்வு முடிவுகளை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்து பரிந்துரைக்க 13 நபர்கள் அடங்கிய குழுவை சிபிஎஸ்இ வாரியம் அமைத்தது. மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலாளர் விபின் குமார், டெல்லி கல்வித்துறை இயக்குநர் உதித் பிரகாஷ் ராய், கேந்திரியா வித்யாலயா ஆணையர் நிதி பாண்டே, நவோதயா வித்யாலயா ஆணையர் வினாயக் கார்க், சண்டிகர் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருபிந்திரஜித் சிங் பிரார், சிபிஎஸ்இ இயக்குநர்(ஐடிபிரிவு ) அந்தி்க்ஸ் ஜோரி, சிபிஎஸ்இ இயக்குனர் ஜோஸப் இமானுவேல், யுஜிசி, என்சிஇஆர்டி அமைப்பிலிருந்து தலா ஒருவர், பள்ளிகள் தரப்பிலிருந்து இரு பிரதிநிதிகள் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.