NEET Counselling: காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான, சிறப்பு கவுன்சிலிங்கில் சாய்ஸ்-ஃபில்லிங்கிற்கான அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.
சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த உத்தரவு
கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி லக்னோ மருத்துவக் கல்லூரி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.எஸ். விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிட்டு கவலை தெரிவித்தனர். தொடர்ந்து, கடைசி சுற்று கவுன்சிலிங் முடிந்தபிறகு காலி இடங்கள் இருந்தால் சிறப்பு கவுன்சிலிங் நடத்தலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். காலியாக இருக்கும் என்ஆர்ஐ இடங்களை கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம் என உத்தரவிட்டனர்.
தொடங்கியது சாய்ஸ்-ஃபில்லிங்
நீட் யூஜி 2024 தேர்வு அடிப்படையில் ஆல் இந்தியா கோட்டா மற்றும் மாநில ஒதுக்கீட்டில் காலியாக உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை பூர்த்தி செய்வதற்கான மூன்றாவது சுற்றை நடத்துவதற்கான நடைமுறையை மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தொடங்கியுள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளில் சேர ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், mcc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகி நீட் யூஜி தேர்வு ரோல் நம்பர், பாஸ்வோர்ட் மற்றும் செக்யூரிட்டி பின்னை பதிவிட்டு உள்ளே நுழையலாம். தொடர்ந்து நாளை காலை 11 மணி வரையில், சாய்ஸ் ஃபில்லிங் ஆப்ஷனை பயன்படுத்தி காலியிடங்கள் உள்ள கல்லூரியில் தங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்வு செய்யலாம். இதற்கான அவகாசம் நாளை காலை 11 மணியுடன் முடிவடைய உள்ளது.
மருத்துவ சீட் ஒதுக்கீடு
தொடர்ந்து, நாளையே தகுதியான மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும். அதன்பிறகு, ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் டிசம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் ஆஜராக வேண்டும் என மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது.