கோடை விடுமுறையில் மாணவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? கூடாது என்று பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

’’அனைத்து பள்ளிகளுக்கும்‌ கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில்‌ மாணவர்களின்‌ பாதுகாப்பு கருதி பெற்றோர்கள்‌ கவனத்தில்‌கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்‌ குறித்து கீழ்க்காணும்‌ வேண்டுகோள்‌.

மாணவர்களின்‌ பாதுகாப்பு

மாணவர்கள்‌ விடுமுறை நாட்களில்‌ கடல்‌, ஆறு, ஏரி, குளம்‌ மற்றும்‌குட்டை போன்ற நீர்‌ நிலைகளில்‌ குளிப்பதற்கு பெற்றோர்கள்‌ அனுமதிக்க வேண்டாம்‌.

கோடை வெப்பம்‌ அதிகமாக இருப்பதால்‌ வெளிப்புற விளையாட்டுகளின்‌போது அதிக அளவு தண்ணீரை அருந்த செய்யுங்கள்‌. சூரிய ஒளி தாக்காமல்‌ இருக்க மாணவர்கள்‌தொப்பிகளைப்‌ பயன்படுத்த அறிவுறுத்துங்கள்‌. உச்ச சூரிய வெப்ப நேரத்த்தில்‌ வெளியே செல்வதையும்‌ வெயிலில்‌ விளையாடுவதையும்‌ தவிர்க்கவும்‌ (காலை 10- மாலை 4) அறிவுறுத்துங்கள்‌. ஆபத்தான பொருட்களைப்‌ மாணவர்களின்‌ பார்வையில்‌ படாதவாறு பாதுகாப்பாக வைக்கவும்‌.

மாணவர்களின்‌ மனநலம்‌ காத்தல்‌

பள்ளி கோடை விடுமுறை நாட்களில்‌ சில மாணவர்கள்‌ தங்கள்‌ உடல்‌ மற்றும்‌ மன நலனைப்‌ பாதிக்கும்‌ சவால்களை எதிர்கொள்ள நேரிடும்‌. தனிமை உணர்வுகளைத்‌ தடுக்க நண்பர்கள்‌ மற்றும்‌ குடும்பத்தினருடன்‌ சேர்ந்து விளையாடுதல்‌, உணவு அருந்துதல்‌, இசை நிகழ்ச்சிகளை கவனித்தல்‌ போன்றவற்றின்‌ மூலம்‌ சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும்‌ மனநலனை பேணவும்‌ முடியும்‌. தொலைக்காட்சி மற்றும்‌ கைபேசி ஆகியவற்றை பார்ப்பதில்‌ அதிகமான நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்‌.

ஆரோக்கியமான உணவு

மாணவர்களின்‌ வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம்‌. அதனை உறுதிபடுத்தும்‌ விதமாக பராம்பரிய உணவு வகைகளை தயார்‌ செய்து அளியுங்கள்‌.

கோடை காலத்தை எதிர்கொள்ள எதுவாக கோடை காலத்திற்கு ஏற்ற பழவகைகளை மாணவர்களுக்கு வழங்குங்கள்‌.

கல்வி இணை செயல்பாடுகள்‌

பெற்றோர்கள்‌ மாணவர்களை அருகாமையில்‌ உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்து சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப்‌ படிக்க ஊக்குவிக்கவும்‌.

அவர்களின்‌ ஆர்வங்களைப்‌ பொறுத்து காமிக்ஸ்‌ புத்தகங்கள்‌, பொது அறிவு நூல்கள்‌, சிறார்‌ கதைகள்‌, நீதி நூல்கள்‌ மற்றும்‌ பெருந்தலைவர்கள்‌ பற்றிய நூல்களை படிக்க அறிவுறுத்துங்கள்‌. இசை, நடனம்‌ மற்றும்‌ ஒவியம்‌ போன்றவற்றில்‌ ஆர்வம்‌ உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில்‌ இவற்றை கற்றுக்‌ கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும்‌.

ஆரோக்கியம்‌ & நல்வாழ்வு

மாணவர்கள்‌ காலை மற்றும்‌ இரவு இரண்டு வேளை பல்‌ துலக்குதல்‌, காலை மற்றும்‌ மாலை இரண்டு வேளை குளித்தல்‌ போன்ற பழக்கங்களை ஊக்குவியுங்கள்‌.

குடும்பம்‌ & சமூக நேரம்‌

தாத்தா பாட்டி உள்ள வீடுகளில்‌ சேர்ந்து உணவு அருந்துங்கள்‌. மேலும் பெரியோர்களை மதிக்கவும்‌ அவர்களுக்கு உதவி செய்யவும்‌ பழக்குங்கள்‌.

பள்ளி தலைமையாசிரிகளுக்கு மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின்‌ பெற்றோர்‌ கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌’’.

இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.