தமிழ்நாட்டின் பிரபல யூ டியூபர் விஜே சித்து. யூ டியூபில் பொதுமக்களை கவரும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகளை தன்னுடைய யூ டியூபில் தொடர்ந்து வழங்கி வரும் விஜே சித்து நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் அவதாரம் எடுத்த விஜே சித்து:
இந்த நிலையில் விஜே சித்து முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு டயங்கரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நகைச்சுவை பாணியில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் நாயகனாகவும் விஜே சித்து நடிக்கிறார்.
படத்தின் பெயர் அறிவிப்பு வீடியோவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இளவரசு, விஜே சித்து, அர்ஷத்கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தின் மற்ற கலைஞர்கள் உள்ளிட்ட மற்ற விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
டயங்கரம்:
விரைவில் அந்த அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. விஜே சித்து தனது யூ டியூப் வீடியோக்களில் பயங்கரம் என்ற வார்த்தைக்குப் பதிலாக டயங்கரம் என்ற வார்த்தையே அதிகளவில் பயன்படுத்துவார். அந்த வார்த்தை அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதன் காரணமாக, விஜே சித்து தான் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்திற்கு அந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.
விஜே சித்து தன்னுடைய இயல்பான மற்றும் நகைச்சுவையான பேச்சு மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர். இதன் காரணமாக இவர் இயக்கும் முதல் படத்தின் மீதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.