வருங்காலத்தில் எமிஸ் தளத்தில் பதிவு செய்த மாணவர்களின் பட்டியல் மட்டுமே நலத்திட்டங்களுக்குக் கணக்கில் கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுகுறித்துப் பள்ளிக்‌ கல்வி ஆணையரகம் சார்பில், தொழில் கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


’’அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும்/ பகுதி நிதி உதவி பெறும்‌ உயர்‌நிலை, மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ / மாணவியரின்‌ எண்ணிக்கை எமிஸ் எனப்படும் கல்வியியல்‌ மேலாண்மைத்‌ தகவல்‌ மையத்தில்‌ (Education Management Information System) பதிவு செய்யப்பட்டுள்ளது.  


இந்த எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும்‌ மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டி உள்ளது. இதனால்‌ முதன்மைக் கல்வி அலுவலர்கள்‌ இதன் ‌மீது தனி கவனம்‌ செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ பள்ளிகளில்‌ உள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை சரிபார்க்க வேண்டும். அதில்‌ வேறுபாடு இருப்பின்‌ அதனையும்‌ எமிஸ்-ல்‌ டிசம்பர் 16ஆம் தேதிக்குள்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.


இனி வருங்காலங்களில்‌ முதன்மைக் கல்வி அலுவலரால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட மாணவர்களின்‌ எண்ணிக்கை மட்டுமே, சார்ந்த நலத் திட்டங்களுக்கான தேவைப் பட்டியலாக எடுத்துக் கொள்ளப்படும்‌’’. 


இவ்வாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.




எமிஸ் தளம்


முன்னதாக, அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை பணியாளர்கள் பணிக்கு வரும்பொழுது தங்கள் வருகையை புதிய செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் முறை என்பது ஏட்டில் பதிவு செய்யப்பட்டு பின் கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு வந்தது.


இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் அதற்கு முன்பு வெறும் ஏட்டில் மட்டும் பதிவு செய்யப்பட்டது.  இந்த முறைகளில் இருக்கும் காகித பயன்பாட்டை முற்றிலும் குறைத்து டிஜிட்டல் நுட்பத்திற்கு மாறும் வகையில் கல்வித்துறை திட்டமிட்டது.


அதன்படி பள்ளிக் கல்வி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில், ’’பள்ளிகளில் கற்றல் திறன் சிறப்பாக இருக்க தலைமை ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு வகுப்பிற்கு சென்று பாடம் கற்பிக்க வேண்டும், கல்வி அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்கள் உத்தரவின்றி பள்ளிக்கு விடுமுறை அளிக்க கூடாது.


அதே போல ஆகஸ்ட் 1 முதல் மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் வருகையை பதிவேட்டில் பதிவு செய்ய  வேண்டாம். மாறாக வருகை பதிவினை செயலியில் மட்டும் பதிவிட வேண்டும். அதே போல ஆசிரியர்கள்  தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்க டிஎன்எஸ்இடி என்ற பள்ளி செயலியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.