தருமபுரி அருகே தேர்தல் ஆணைய விதிமுறையின்படியே நடைபெற்ற அரசு பள்ளி மாணவர் மன்ற தேர்தலில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 

 

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த உம்மியம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 340-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியர் மாணவ, மாணவிகளுக்கு கல்வியோடு, வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு கல்வி முறைகளை கற்பிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்கள் தலைவரை தேர்ந்தெடுக்க மாணவர் மன்ற தேர்தல் நடத்தி, தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டும், 14 துறை அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிப் பணிகளை பிரித்து கொடுத்து பராமரித்து வருகின்றனர். 



 

இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளி மாணவர் தலைவர்களை தேர்ந்தெடுக்க மாணவர் மன்றத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கலோடு தொடங்கியது. இதில் 18 மாணவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் மூன்று மாணவர்களின் மனுக்களில், சிறு தவறு ஏற்பட்டதால், அவைகள் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒருவர் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் இன்று காலை பள்ளி மாணவர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு, பள்ளியிலேயே நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவிற்கு வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி அலுவலர்கள், முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 14 வேட்பாளர்களுக்கான சின்னங்களை ஒதுக்கி, 266 மாணவ, மாணவிகள் வாக்களித்தனர். தொடர்ந்து இந்த வாக்குகள் எண்ணப்பட்டு மாணவர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனை அடுத்து பதவியேற்பு விழாவில் மாணவர் மன்ற தலைவர் துணைத் தலைவர்களோடு 14 துறை அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். இதில் 14 துறை அமைச்சர்களுக்கு தனித்தனியாக துறைகள் ஒதுக்கி, பள்ளிப் பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தேர்தல் ஆணையம் நடத்துகின்ற தேர்தலை போன்று விதிமுறைகளைக் கொண்டு முறைப்படி தேர்தல் நடத்துவதால், பள்ளி மாணவர்களுக்கு தேர்தலின்  முக்கியத்துவம் புரிகிறது. அதேபோல் தேர்தலில் வாக்களிக்கிறோம் என்று மகிழ்ச்சி அடைகின்றனர்.



 

மேலும், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பணி என்னென்ன என்பதை மாணவர்களுக்கு பள்ளிப்பருவத்திலே தெரியப்படுத்த முடியும் என்பதற்காக தேர்தல் விதிமுறைகளின் படி இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் தேர்தலில் வாக்களித்த மாணவ, மாணவிகள் நேர்மையானவர்களை, நல்ல வாக்குறுதி கொடுத்தவர்களுக்கு வாக்களித்துள்ளனர். தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகவே வைத்துள்ளனர். தருமபுரி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த தேர்தலில் வாக்களித்த மாணவி, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்தல் அலுவலராக தலைமையாசிரிய நரசிம்மன், வாக்குஞ்சாவடி அலுவலர்களாக ஆசிரியர் ராதாகிருஷ்ணன், எழிலரசி, நிர்மலா ரோஸ்லின், நிர்மலா தேவி, புஷ்பா, ஜெயபாரதி, செண்பகம், ரோசலின், மேனகா, ஷர்மிளா உள்ளிட்ட ஆசிரியைகள் பணியாற்றினர்.