குழந்தைகளைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு சிறை தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் குழந்தை பாதுகாப்பு விதிகளின்படி (Child protection Laws) இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 


பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை


தரமான கல்வியை மேம்படுத்தும் வகையில், அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்த முறை அமலுக்கு வர உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கா செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளதாக கல்ஃப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கல்ஃப் செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி,  20 நாட்களுக்கு முறையான காரணம் இல்லாமல், பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். 


இதன்படி, பள்ளிக்குத் தொடர்ச்சியாக வராத குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது பொது வழக்கு பதியப்படும். விசாரணை முடிவுக்குப் பிறகு, வழக்கு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். குழந்தை பள்ளி செல்லாத சூழல் குறித்து, சம்பந்தப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் அஜாக்கிரதையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், நீதிபதி அவர் மீது உரிய தண்டனை அளிக்கப் பரிந்துரை செய்வார். இது சிறைத் தண்டையாக இருக்கும். புதிய கல்வி ஆண்டில், கல்வியின் தரத்தை உறுதி செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.  


குழந்தையிடமே வாக்குமூலம்


பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீதான சட்ட நடைமுறை பல கட்டமாக நடைபெறும். முதலில், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் சம்பந்தப்பட்ட நிகழ்வு குறித்து கல்வித் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். தொடர்ந்து கல்வித் துறை, விசாரணையைத் தொடங்கும். 


அதை அடுத்து கல்வித் துறை, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். பிறகு குடும்ப நலத்துறை, ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று சம்பந்தப்பட்ட குழந்தையிடமே வாக்குமூலம் பெறும். அதைத் தொடர்ந்து சிறைத் தண்டனை தேவையா, இல்லையா என்று துறை முடிவு செய்யும். 


2 மாத கால கோடை விடுமுறைக்குப் பிறகு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சவுதி அரேபிய  மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர். அவர்களுக்கு புவி அறிவியல், வான்வெளி, நிகழ்ச்சி மேலாண்மை உள்ளிட்ட புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய சவுதி கல்வித்துறை அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.