மாணவர்கள் 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் என்று முழுவதுமாக தங்களின் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. படித்து முடித்து கிரெடிட் மதிப்பெண்களைப் பெற்றால் உடனடியாக சான்றிதழ்/ டிப்ளமோ/ டிகிரி பட்டத்தை வழங்கலாம் என்று யுஜிசி குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் தேசிய கல்விக் கொள்கை கடந்த 1968ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976இல் அரசமைப்புச் சட்டத்தின் 42ஆவது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அதன்பின் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 1986ஆம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. பிறகு இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழு 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து, 2020-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. மத்திய அரசு 2020 புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.
இதில், ஒரே மாணவர் ஒரு படிப்பில் சேர்ந்து, ஓராண்டில் சான்றிதழ் படிப்புடன் வெளியேறலாம். இரண்டு ஆண்டுகளில் டிப்ளமோ படிப்புடன் வெளியேறலாம் அல்லது 3 ஆண்டுகள் படித்து பட்டப் படிப்புடன் வெளியேறலாம் (multiple entry and exit in higher education) என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தன.
இதுகுறித்து பட்டங்களின் விவரம் குறித்த அறிவிப்பை மதிப்பாய்வு செய்வதற்கும் புதிய பட்டங்கள் பெயரிடல்களை பரிந்துரைக்கவும் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
அதில், மாணவர்கள் 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் என்று முழுவதுமாக தங்களின் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. படித்து முடித்து கிரெடிட் மதிப்பெண்களைப் பெற்றால் உடனடியாக சான்றிதழ் / டிப்ளமோ/ டிகிரி பட்டத்தை வழங்கலாம் என்று யுஜிசி குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
பல்வேறு உயர் கல்விகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க, அகாடமி ஆஃப் கிரெடிட் என்ற பெயரில் வங்கி உருவாக்கப்படும் என்றும் மாணவர்கள் பல்வேறு செமஸ்டர்களில் பெறும் மதிப்பெண்கள், அவர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் சேர்க்கப்படும் எனவும் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, போதிய கிரெடிட் மதிப்பெண்களைப் பெற்றால் உடனடியாக சான்றிதழ்/ டிப்ளமோ/ டிகிரி பட்டத்தை பெற மாணவர்கள் தகுதியானவர்கள் என்று யுஜிசி குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.