எங்கள் வீட்டுப் பிள்ளைகள் மொட்டை வெயிலில் நின்று உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுமளவிற்கு நீங்கள் என்ன தேசம் போற்றும் தியாகியா என்று தமிழ்நாடு பாஜக கடுமையாகச் சாடி உள்ளது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சரா? என்றும் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.


இதுகுறித்து பாஜக இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


எங்கள் வீட்டுப் பிள்ளைகள் மொட்டை வெயிலில் நின்று உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுமளவிற்கு நீங்கள் என்ன தேசம் போற்றும் தியாகியா? நாடு கண்ட நல்லவரா? அல்லது உலகப் புகழ்பெற்ற உத்தமரா? யார் நீங்கள் உதயநிதி? தந்தையின் சிபாரிசில் சொகுசாக துணை முதல்வர் பதவி வாங்கியவர் அவ்வளவுதானே?


பள்ளி சிறார்களை பட்டப் பகலில் மொட்டை வெயிலில் நிற்க வைப்பதா?


தென்காசி மாவட்டத்தில் ஐந்தருவி அருகே உள்ள ஒரு பள்ளியில் உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறார்களை பட்டப் பகலில் மொட்டை வெயிலில் நிற்க வைத்து உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூற கட்டாயப்படுத்தியுள்ள, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அடியாட்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.


வாரிசு அடிப்படையில் பதவி வாங்கியதைத் தவிர, நீங்கள் அப்படி என்ன அரும்பெரும் சாதனைகளைப் படைத்துவிட்டீர்கள்? உங்கள் பிறந்த நாளை பள்ளிக் குழந்தைகள் எதற்கு கொண்டாட வேண்டும்?


உங்களின் அடையாளம்தான் என்ன?


“கோபாலபுர வாரிசு” என்ற அடைமொழியை நீக்கிவிட்டால், உங்களின் அடையாளம்தான் என்ன? நீங்கள் பங்கேற்கும் விழாவில் பள்ளி சிறுவர்களைத் தூய்மைப் பணியில் ஈடுபடுத்துவது, அரசுப் பள்ளி மாணவர்களைக் கழிவறைகளை சுத்தம் செய்ய வைப்பது, பள்ளி மாணவர்களை இப்படி கட்டாயப்படுத்தி பிறந்த நாள் வாழ்த்துக்களைப் பெறுவது என்று தொடர்ந்து தமிழக மாணவர்களை உங்கள் வீட்டு வேலையாட்கள் போன்று நடத்துவது ஏன்?






உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சரா?


தமிழக துணை முதல்வர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் உங்களுக்கு, இத்தகைய கொடுமைகளைத் தடுக்குமளவிற்கு அதிகாரம் இல்லையா? அல்லது இவையனைத்தும் உங்களது திட்டமிடலா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே, உங்கள் துறையில் நடக்கும் இதுபோன்ற தொடர் அநீதிகளுக்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்? உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவர் என்ற பொறுப்பில் கண்ணும் கருத்துமாக சேவையாற்றும் நீங்கள், எப்போதுதான் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செயல்படுவீர்கள்?


இவ்வாறு பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.