உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11ஆம் வகுப்புச் சிறுமி தேர்வின்போது சானிட்டரி நாப்கின் கேட்டதால், வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தேர்வ எழுத பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவருக்கு பீரியட்ஸ் ஏற்பட்ட உணர்வு உருவாகி உள்ளது.


நாப்கின்னுக்கு பதிலாக அவமானம்


இதனால் தேர்வறையில் இருந்து எழுந்த சிறுமி, பள்ளி தலைமை ஆசிரியரிடம் சானிட்டரி நாப்கின் தனக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு நாப்கின்னுக்கு பதிலாக அவமானமே கிடைத்துள்ளது. சனிக் கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.


இதுதொடர்பான புகாரை சிறுமியின் தந்தை அளித்துள்ளார். அதில் மேலே கூறியுள்ள விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.


1 மணி நேரம் வெளியே நின்ற சிறுமி


ஆனால் பள்ளி தலைமை ஆசிரியரோ வகுப்பறையை விட்டு வெளியே செல்லுமாறு கூறி உள்ளார். சுமார் 1 மணி நேரம் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளார்.


சிறுமியின் தந்தை ஆட்சியருக்கும் மாவட்ட பள்ளிகளின் ஆய்வாளருக்கும் (DIOS), புகார் அனுப்பி உள்ளார். அத்துடன் மாநில பெண்கள் ஆணையம், பெண்கள் நலத்திட்டத் துறைக்கும் புகார் அனுப்பப்பட்டு உள்ளது.


விசாரணை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை


இதுகுறித்து மாவட்ட பள்ளிகளின் ஆய்வாளர் தேவகி நந்தன் கூறும்போது, ’’இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


இதையும் வாசிக்கலாம்: கற்றல், கற்பித்தலில் அடுத்த உச்சம்; அரசின் திட்டத்தால் 44 லட்சம் மாணவர்களுக்கு பயன்!- என்ன தெரியுமா?