நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா என்று தமிழக அரசு விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக நீட் தேர்வு விலக்குச் சட்டம் குறித்துக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆளுநர் மாளிகைக்கு ஆர்டிஐ அனுப்பி இருந்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளதாவது:
’’தமிழ்நாடு சட்டப் பேரவை இரண்டுமுறை நிறைவேற்றி அனுப்பிய மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022 மார்ச் 29 அன்று ஆளுநர் செயலகத்திற்கு மனு அனுப்பப்பட்டது. மிகவும் கால தாமதமாக (98 நாட்கள் கழித்து) ஜூலை 7, 2022 தேதியிட்ட கடிதம் ஜூலை 11, 2022 அன்று கிடைக்கப் பெற்றோம்.
"சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளதாகவும், அதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது" என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனை என்றால் எவ்வாறு புரிந்து கொள்வது. ஆளுநர் செயலகத்திலா? அல்லது குடியரசுத் தலைவர் செயலகத்திலா?
ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சட்ட முன் வடிவு அனுப்பப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
முதல் அமைச்சர் அறிவித்து இரண்டு மாதங்கள் கழித்து, "சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனை"யில் உள்ளது என்று தெளிவற்ற, நேரடி பதில் தருவதிலிருந்து தப்பிக்கும் சொல்லாடலை ஆளுநர் மாளிகை பயன்படுத்தி உள்ளதால், ஆளுநர் மாளிகையில் இருந்து சட்ட முன் வடிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குச் சென்றுள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.
பதில் திருப்தியாக இல்லை, நேரடி பதில் வேண்டும் என்று கோரி ஆளுநர் செயலகத்தின் தகவல் தரும் அடுத்த நிலை அதிகாரிக்கு மேல் முறையீடு மனுவை அனுப்பி உள்ளோம்.
தமிழ்நாடு அரசு, சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்து, தெளிவான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரி முதல் அமைச்சருக்குக் கடிதம் அனுப்பி உள்ளோம்.
தமிழ்நாடு மக்களுக்கு சட்ட முன் வடிவு குறித்த உண்மை நிலையும் தெளிவான விடையும் தேவை. பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி தருவதாக உள்ளது'' என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா என்று தமிழக அரசு விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க ஆளுநர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல.
நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. உரிய அதிகார நிலையில் உள்ளவர் ஆளுநரா? மத்திய அரசா? குடியரசுத் தலைவரா? என்பதை ஆளுனர் மாளிகை தெரிவிக்கவில்லை!
நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது என ஆளுநர் மாளிகை தெரிவித்ததாக மே 4-ஆம் தேதி முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், ஆளுநர் மாளிகை இப்போது அளித்துள்ள பதில், நீட் விலக்கு சட்டம் இன்னும் ஆளுநர் மாளிகையில்தான் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது!
தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கூடுதல் அக்கறை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுநர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்.''
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்