மாநிலக்‌ கல்விக்‌ கொள்கைக்கென இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஆக.30ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 


மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து, மாநிலத்துக்கென தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று தெரிவித்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ வல்லுநர்களைக்‌ கொண்ட உயர்மட்டக்‌ குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்கும்‌” என அறிவிக்கப்பட்டிருந்தது.


ஓராண்டு கால அவகாசம்


அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் குழு அமைக்கப்பட்டது. குழுவின்‌ தலைவராக புதுடெல்லி உயர் நீதிமன்ற மேனாள்‌ தலைமை நீதிபதி த.முருகேசன்‌  நியமிக்கப்பட்டார். இக்குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள்‌ தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது, மாநில கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை உருவாக்க‌ பொதுமக்கள்‌ / கல்வியாளர்கள்‌ / தன்னார்வலர்கள்‌ / தொண்டு நிறுவனங்கள்‌/ ஆசிரியர்கள்‌ / ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்‌/ மாணவர்கள்‌ / பெற்றோர்கள்‌ / தனியார்‌ கல்வி நிறுவனத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை பெறப்பட்டன. மேலும்‌ உயர்மட்டக்குழு இணைப்பில்‌ கண்டுள்ள மாவட்டங்களில்‌ கருத்துக் கேட்புக்‌ கூட்டங்கள்‌ நடத்தப்பட்டன.


எனினும், தேவை கருதி உயர்மட்டக் குழுவின் கால அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதனால் குழு தனது அறிக்கையை 2023 செப்டம்பர் மாத இறுதிக்குள் அளிக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.  


பேராசிரியர் ஜவஹர் நேசன்‌  விலகல்


இதற்கிடையே மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் இருந்து, மாநில உயர் நிலைக்‌ கல்விக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ஜவஹர் நேசன்‌  விலகுவதாக அறிவித்தார். இதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் குறுக்கீடு மற்றும் தேசியக் கல்விக் குழு - 2020ன் அடிப்படையில் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கத் திட்டமிடப்படுவதையும் காரணமாக அவர் கூறினார். எனினும் இதற்கு அரசும் பிற உறுப்பினர்களில் சிலரும் மறுப்புத் தெரிவித்தனர். 


தொடர்ந்து காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் ஃப்ரீடா ஞானராணி, சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் ஜி.பழனி  ஆகியோர் புதிய  உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.


செப்டம்பரில் சமர்ப்பிப்பு


இந்த நிலையில், மாநிலக் கல்விக் கொள்கைக்கான பணிகள் பெருமளவு நிறைவு பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, முடிவுகள் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில், மாநிலக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.