சம வேலைக்கு சம ஊதியத்துக்கான போராட்டத்தில் சங்க பிரிவினை பாராமல் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களுக்கு SSTA அழைப்பு விடுத்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் விடுத்துள்ள அழைப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவில் அடிப்படை ஊதியம் ₹3,170 குறைக்கப்பட்டு தற்போது ஏழாவது ஊதியக் குழுவில் கடைநிலை ஊழியர்களின் ஊதியமான ₹20,600 அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. 16 ஆண்டுகளாக பல இயக்கங்கள் போராடி வரும் சூழ்நிலையில் எங்களது இயக்கமும் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தோம். அதிலும் குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் தீவிரமான போராட்டங்களை எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக நடத்தி வருகிறோம் என்பதை அனைவரும் அறிந்ததே.

Continues below advertisement

இதற்காக கடந்த ஆட்சியில் தற்போதைய தமிழக முதல்வர் நேரில் இரண்டு முறை வந்திருந்து ஆதரவு கொடுத்து திமுக அரசின் தேர்தல் அறிக்கை 311ல் இடம் பெற வைத்து ஆட்சி அமைந்ததும் 01-01-2023ல் முதல் அறிவிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க பரிந்துரைக்க மூன்று நபர்கள் அடங்கிய குழு’ அமைத்து அரசாணை பிறப்பித்தார்.

மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைத்து மூன்றாண்டுகளாகியும் எந்த முடிவும் ஏற்படாததால் ஆட்சியும் இன்னும் சில நாட்களில் முடிவடைய போவதால் மிகத் தீவிரமான போராட்டத்தை சென்னையிலும் மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முன்னெடுத்து வருகிறோம்.

20 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்புக்காக…

இந்த போராட்டமானது ஒரு இயக்கம் நடத்தும் போராட்டம் என்று கடந்து செல்லாமல் ஒரு இடைநிலை ஆசிரியர் இனத்திற்கான போராட்டமாக கருதி தொடக்கக் கல்வித் துறையில் உள்ள டிட்டோஜாக் மற்றும் பிற ஆசிரிய இயக்கங்கள் இந்த போராட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவை வழங்கி நேரடியாக களத்தில் வந்து 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் குடும்பங்களை பாதுகாத்திட அன்போடு வேண்டுகிறோம். இயக்கங்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இனத்திற்காக ஒன்றுபடுவோம்.

கடந்த பத்து நாட்களில் அரசின் கடுமையான அடக்குமுறைகளைத் தாண்டி ஆண் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள் கடுமையாக தொடர்ந்து போராட்டக் களத்தில் பங்கெடுத்து வருவதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வருகிறது. கடந்த காலங்களில் ஜாக்டோ ஜியோ போராட்டங்களில் ஆசிரியர்களை கைது செய்த போதும் SSTA அதில் பங்கெடுத்து எங்கள் இயக்க 73 ஆசிரியர்களும் சிறைக்குச் சென்றார்கள். மேலும் தற்போதைய ஜாக்டோ ஜியோ ஒரு நாள் மற்றும் காலவரையற்ற போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்தது மேலும் பங்கெடுப்போம் என்ற உறுதியையும் சமூக வலைதளங்களில் கடிதம் வாயிலாக வெளியிட்டோம்.

ஆசிரியர் இன ஒற்றுமைக்கு பேராபத்து

தற்போதைய சூழ்நிலையில் இது ஒரு இயக்கத்திற்கான போராட்டம் என்று அமைதி காப்பது நமது ஒட்டுமொத்தமான ஆசிரியர் இன ஒற்றுமைக்கும் பேர் ஆபத்தாக மாறிவிடும்.

தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இந்த ஊதிய முரண்பாட்டிற்கான போராட்டத்தில் பங்கெடுக்கும்போது இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு என்ற ஒற்றைக் கோரிக்கையில் அனைவரும் போராடி இந்த ஊதியத்தை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைத்து தொடக்கக் கல்வித்துறை சங்கங்களுக்கும் உள்ளது. எனவே தயவு செய்து இதில் சங்க பிரிவினை பாராமல் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமாய் வேண்டுகிறோம்.

அனைத்து இயக்கங்களுக்கும் SSTA ஆதரவு கேட்டு கடிதம் 17.12.2025 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. தொடக்கக் கல்வித் துறையின் ஆணிவேரான இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ஒற்றுமையாக களம் கண்டு ஊதியத்தை வென்று கொடுத்த பெருமை மூத்த இயக்கங்களுக்கு கிடைத்திடட்டும்.

நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளது. தொடக்கக்கல்வி இயக்கங்கள் மட்டும் இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை. ஒன்றுபட்ட போராட்டம் ஓர் இனத்தை வாழ வைக்க உதவட்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க (SSTA) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் வேதனை தெரிவித்துள்ளார்.