எஸ்எஸ்சி சிஜிஎல் முதல்கட்டத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில், பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வான சிஜிஎல் தேர்வை நடத்துகிறது. முதல்கட்டத் தேர்வை எஸ்எஸ்சி நடத்திய நிலையில், இரண்டாம் கட்டத் தேர்வு ஜனவரி மாதம் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக முதல்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.


17,227 காலி இடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வு


நாடு முழுவதும் செப்.9 முதல் 24ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற்றது. குறிப்பாக, மத்திய அமைச்சகத்தின் பல்வேறு துறைகள், அமைச்சகங்கள், முகமைகளில் காலியாக உள்ள குரூப் பி, குரூப் சி பணிகளுக்கான 17,227 காலி இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடந்தது.


வெளியான தற்காலிக விடைக் குறிப்பு


அக்டோபர் 4ஆம் தேதி CGL Tier 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அக்டோபர் 8 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.


இந்தத் தேர்வில் தகுதி பெற தேர்வர்கள் குறைந்தபட்சம் 30 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஓபிசி/ பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் 25 சதவீதமும், பிற பிரிவினர் 20 சதவீத மதிப்பெண்களும் பெற்று இருக்க வேண்டும்.


தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி? (SSC CGL Result 2024)


தேர்வு முடிவுகள் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்படும். இந்த முடிவுகள் வெகு விரைவில் பிடிஎஃப் வடிவத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • இதைக் காண ssc.gov.in  என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

  • அதன் முகப்புப் பக்கத்தில் தோன்றும் SSC CGL 2024 Result link என்ற இணைப்பை தேர்வு செய்ய வேண்டும்.

  • அதில் தோன்றும் பிடிஎஃப் பக்கத்தில், உங்களின் பதிவு எண் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டியது அவசியம்.


கூடுதல் தகவல்களுக்கு: ssc.gov.in