சென்னை ஐஐடியில் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும் என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அறிவித்துள்ளார்.
ஐஐடி மெட்ராஸ் மாணவ- மாணவிகள் 50-வது ஆண்டாக 'சாரங்' கலாச்சார விழாவைக் கொண்டாடுகின்றனர். 'சாரங்' என்று அழைக்கப்படும் இந்த வருடாந்திர கலாச்சார விழா, நேற்று தொடங்கிய நிலையில் ஜனவரி 2024 வரை கொண்டாடப்பட உள்ளது.
மார்டி கிராஸ் டூ சாரங்
1974-ல் தொடங்கப்பட்டது முதல் 'மார்டி கிராஸ்' தென்னிந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி சென்னையின் கலாச்சாரக் காட்சியின் ஒருங்கிணைந்த குதியாக விளங்கி வருகிறது. இந்திய வேர்களை மதிக்கும் விதமாகவும், இக்கல்வி நிறுவன வளாகம் எங்கும் காணப்படும் மான்களைக் கொண்டாடும் விதமாகவும் மார்டி கிராஸ் 1996-ம் ஆண்டு முதல் 'சாரங்' என மறுபெயரிடப்பட்டது.
கலாச்சாரத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக, நேற்று மாலை (10 ஜனவரி 2024) ஓபன் ஏர் தியேட்டரில் ‘கலாச்சார இரவு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி வயலின் இசைத்து தொடங்கி வைத்தார்.
இக்கலாச்சார விழா குறித்து பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி, ’’சென்னை ஐஐடியின் சாரங் கலாச்சார நிகழ்வில் இந்த ஆண்டு தமிழகத்தின் பாரம்பரிய இசை, நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஐஐடியில் வரும் கல்வியாண்டிலிருந்து விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல், 2 ஆண்டுகளில் கலைப் பிரிவுக்கும் தனி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
சாரங் கலை விழா
இத்திருவிழாவிற்கு 80,000 மாணவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோவொரு கல்லூரி விழாவைப் போலன்றி, தென்னிந்தியாவின் கலாச்சாரக் காட்சிகளை உள்ளடக்கிய கொண்டாட்டமாக சாரங் திகழ்கிறது. 'திருவிழா அனுபவத்தை அனுபவிக்க விரும்பும் சாகசப் பிரியர்களுக்கான Adventure Zone அல்லது ஆர்வலர்களுக்கான ஸ்கேட்போர்டு பயிற்சியரங்கம்… இப்படி ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை இடம்பெறச் செய்திருக்கிறது.
மார்கழி மாதத்தை சிறப்பிக்கும் வகையில், நேறு 'கிளாசிக்கல் நைட்' நிகழ்வுடன் சாரங் தொடங்கியது. முதல்நாள் 'கோரியோ நைட்'டில் நாடெங்கிலும் இருந்து நடனக் குழுக்கள் மேடையை அலங்கரித்தன. டிஜே ஹோலி சி குழுவினரின் EDM நைட் தொடக்கத்துடன் மேட்டிஸ், சாட்கோ இரட்டையர்களின் நிகழ்ச்சியும் இடம்பெறும். மூன்றாம் நாளில் RJD இசைக்குழு மற்றும் 'தாய்க்குடம் பிரிட்ஜ்' குழுவினர் வழங்கும் ராக் நைட் உடன் 3 ஆம் நாள் நிகழ்ச்சிகள் முடிவடையும். கடைசி நாளன்று 'ப்ரோஷோ நைட்' நிகழ்வில் பன்முகப் பின்னணிப் பாடகர் ஃபர்ஹான் அக்தர் தலைமையில் பாப்நைட் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய கலாச்சார விழாவாக ஆரம்பித்த சாரங், கடந்த 50 ஆண்டுகளில் கலைஞர்கள், மாணவர்கள், சமூகங்களுக்கு இடையிலான பெரிய அளவிலான சர்வதேச ஒத்துழைப்பாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.