விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி மற்றும் புனித வெள்ளியான ஏப்ரல் 15ஆம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. பெற்றோர்கள், பல்வேறு அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, சனிக்கிழமை ஆன ஏப்ரல் 16ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டது. இதனால்  ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 (ஞாயிற்றுக் கிழமை) வரை தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. 


இந்த நாட்களில் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாகப் பொதுத் தேர்வுகளை எழுத உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. 


இதையடுத்து விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில், பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த சுற்றறிக்கையில், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட எந்தப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது, அவ்வாறு நடக்கும் வகுப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறும் பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர். 


தொடர் அரசு விடுமுறைகளின்போது தனியார் பள்ளிகள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகளை எடுப்பதும், அவ்வாறு நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உடனடியாக எச்சரிக்கை விடுப்பதும் தொடர் கதையாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.


பாடத்திட்டம் குறைக்கப்படுமா?


கொரோனா வைரஸ் பரவலால் கடந்த இரு ஆண்டுகளாகப் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடைபெறவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளை நடத்துவதில் பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து பொதுத்தேர்வு, செய்முறைத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான கால அட்டவணைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன.


மே மாதம் முழுவதும் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும், திருப்புதல் தேர்வுகளில் உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பாடத்திட்டம் குறைக்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண