பள்ளிக்‌ கல்வித்‌துறையின்‌ ஏற்பாட்டில்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்காக, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ உயர் கல்விக்கான தெற்கு ஆசிய மாநாடு நடந்தது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், வெளிநாடுகளில் சேர்ந்து படிப்பது குறித்த வழிகாட்டல் வழங்கப்பட்டது. 


இதுகுறித்து தமிழ்நாடு மாதிரிப்‌ பள்ளிகள்‌ உறுப்பினர்‌ செயலர்‌ இரா.சுதன்‌ கூறி உள்ளதாவது:


மாணவர்‌ சேர்க்கை விகிதத்தை மேலும்‌ அதிகரிக்க நடவடிக்கை


தமிழ்நாடு GER (Gross Enrollment Ratio) எனப்படும்‌ மாணவர்‌ சேர்க்கை விகிதத்தில்‌ நாட்டிலேயே முதலிடம்‌ வகிக்கிறது. இந்த மாணவர்‌ சேர்க்கை விகிதத்தை மேலும்‌ அதிகரிக்கும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்த முயற்சிகளின்‌ ஒரு பகுதியாக உயர் கல்வியில்‌ குறிப்பாக அயல்நாடுகளில்‌ எங்கெங்கு என்னென்ன பல்கலைக்கழகங்கள்‌ உள்ளன? அங்கு என்னென்ன படிப்புகள்‌ உள்ளன? விண்ணப்பிக்கும்‌ முறைகள்‌, கல்வி உதவித்தொகை பெறும்‌ முறைகள்‌ போன்றவற்றை எல்லாம்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ அறிந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டது. இதற்காக‌ பள்ளிக்‌ கல்வித்‌துறை உயர் கல்விக்கான தெற்கு ஆசிய மாநாட்டை நடத்தியது.


பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்‌. “தமிழ்நாடு அரசு இதுவரை 57 வகையான திட்டங்களை பள்ளிக்‌கல்வித்‌துறைக்காக செயல்படுத்தி உள்ளது. உயர் கல்விக்கான தெற்கு ஆசிய மாநாட்டில்‌ பங்கேற்றுள்ள மாணவர்கள்‌ அனைவரும்‌ மற்ற மாணவர்களிடமும்‌, வெளிநாடுகளில்‌ நாம்‌ உயர்கல்வி பயில நமக்குள்ள வாய்ப்பைப்‌ பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.” என மாணவர்களை கேட்டுக்கொண்டார்‌.


மாநாட்டுத்‌ தொடக்க விழாவில்‌ உரையாற்றிய தய்பெய்‌ பொருளாதார மற்றும்‌ பண்பாட்டு மையத்தின்‌ தலைமை இயக்குநர்‌ ரிச்சர்ட்‌ சின்‌ பேசுகையில்‌ “இந்தியாவின்‌ திறமை வாய்ந்த மாணவர்களுக்காக தைவான்‌ நாட்டு கல்வி நிறுவனங்களில்‌ கல்வி உதவித்தொகைத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்‌.


என்னென்ன நாடுகள் பங்கேற்பு?


மாநாட்டில்‌ தைவான்‌, தென்கொரியா, ஜப்பான்‌, மலேசியா, சிங்கப்பூர்‌ போன்ற நாடுகள்‌ பங்கேற்றன. இந்த நாடுகளின்‌ சார்பாக அதன்‌ தூதரகப்‌ பிரதிநிதிகள்‌ வருகை தந்தனர்‌. தைவான்‌, தென்கொரியா, ஜப்பான்‌, மலேசியா, சிங்கப்பூர்‌ ஆகிய நாடுகளின்‌ தூதரகப்‌ பிரதிநிதிகள்‌ தங்கள்‌ நாடுகளில்‌ உள்ள உயர் கல்விக்கான வாய்ப்புகளை பற்றி மாணவர்களிடையே விளக்கினார்கள்‌. அதைத்‌தொடர்ந்து அந்தப்‌ பிரதிநிதிகள்‌ உடனான அரசுப்‌ பள்ளி மாணவர்களின்‌ கலந்துரையாடலும்‌ நடந்தது.


அரசுப்‌ பள்ளியில்‌ பயின்று தற்போது தைவான்‌ நாட்டுப்‌ பல்கலைக்கழகங்களில் பயின்று வரும்‌ ஜெயஸ்ரீ, ஆவல்‌ சிந்து ஆகியோரின்‌ காணொலிகள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ திட்டங்கள்‌ குறித்த காணொலி, நாட்டின்‌ முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச்‌ சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்‌ குறித்த காணொலி, மணற்கேணி செயலி பற்றிய காணொலி ஆகியவை திரையிடப்பட்டன.


274 அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ தேர்வு


முன்னதாக தமிழ்நாடு மாதிரிப்‌ பள்ளிகள்‌ சங்கத்தின்‌ உறுப்பினர்‌ செயலர்‌ இரா.சுதன்‌‌ வரவேற்புரை ஆற்றினார்‌. அவர் பேசும்போது, ’’கடந்த ஆண்டு மட்டும்‌ 274 அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ நாட்டின்‌ உயர்கல்வி நிறுவனங்களில்‌ படிப்பதற்கு தேர்வாகினர்‌. தைவான்‌நாட்டில்‌ படிப்பதற்கான வாய்ப்பை இந்தியாவிலிருந்து 3 மாணவர்கள்‌ பெற்றனர்‌. அதில்‌ இரண்டு மாணவர்கள்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌” எனத் தெரிவித்தார்‌.


மாநாட்டில் அரசுப்‌ பள்ளி மாணவர்களின்‌ கலை நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றன. பள்ளிக்‌ கல்வித்‌ துறை உயர்‌ அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ பங்கேற்றனர்‌.