நீண்ட நாட்களாக காலியாக இருந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்ஸை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து 6 ஆண்டுகள் பணியில் இருப்பார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசுத் துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினம் என்ற மனப்பான்மையே பெரும்பாலும் இருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி பணிவாய்ப்பு
குரூப் 1, குரூப் 2 , 2 ஏ, குரூப் 4 , விஏஓ, குரூப் 3 என குரூப் 8 வரை தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகளுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காகத் தேர்வாணையம் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பர். அவர்களுக்குப் போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை கவனிக்க, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வருகிறார்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இதில் தலைவர் பணியிடம் காலியாக, நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்தது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து 6 ஆண்டுகள் பணியில் இருப்பார். கடந்த பிப்ரவரி மாதம் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சைலேந்திர பாபுவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவி
முன்னதாக உறுப்பினராக இருந்த முனியநாதன் ஐஏஎஸ், 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தலைவராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு அதற்கான கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பியது. எனினும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் புதிய தலைவராக பிரபாகர் ஐஏஎஸ்ஸை நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.