1, 2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work ) தரக் கூடாது என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை உயர் நீதிமன்றம் வீட்டுப்பாடம் தரத் தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கு குறித்து, அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1ஆம் முதல்-2ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் (Home Work) கொடுக்கப்படுவதைத் தடை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக, பறக்கும் படை உறுப்பினர்களைக் கொண்டு பள்ளிகளை ஆய்வு செய்து தொகுப்பறிக்கை அனுப்பிவைக்கக் கோரப்பட்டது.
ஆனால் தற்போது வரை யாதொரு வட்டாரக் கல்வி அலுவர்களிடம் இருந்தும் எந்தவொரு அறிக்கையும் இந்த அலுவலகத்தில் பெறப்படவில்லை. இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரிடம் இருந்து அலுவலகத்திற்கு நினைவூட்டுக்கள் பெறப்பட்ட வண்ணம் உள்ள நிலையில் பள்ளிக் கல்வி ஆணையருக்கு தொகுப்பறிக்கை அனுப்ப வேண்டியுள்ளது.
இதனால், இனியும் காலதாமதம் செய்யாமல் இச்செயல்முறைகள் கிடைக்க மறு அஞ்சலில் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் கடந்த மூன்று மாதங்களில் (இப்போது வரை) பள்ளிகளை பார்வையிட்டதன் (School Visit) அடிப்படையில் தேதியுடன் அனுப்பி வைக்க அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பார்வையிட்ட பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 2ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் (Home Work) கொடுக்கப்பட்டதா? இல்லையா என்பதனை பள்ளி வாரியாக பார்வை அறிக்கையில் குறிப்பிட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 1ஆம் முதல்-2ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் (Home Work) கொடுக்கப்படுவதைத் தடை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்