தமிழ்நாட்டில்‌ அரசுப்பள்ளி கல்விச்‌ சூழல்‌ தொடர்ந்து சரிந்து வருவதாகவும் சமூக, பொருளாதார ரீதியாகவும்‌ ஒடுக்கப்பட்டவர்கள்‌ மற்றும்‌ பிறருக்கும்‌ இடையே கற்றல்‌ இடைவெளி கூர்மையாக அதிகரித்து வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி உள்ளதாவது:

தனியார்துறை, பொதுத்துறை ஆகிய இரண்டிலும்‌ நாட்டிலேயே நமது மாநிலத்தில்‌ தான்‌ மிகச்சிறந்த கல்வித்துறை உள்கட்டமைப்புகள்‌ உள்ளன. வெளிப்படை காரணங்களால்‌ ஏழைகள்‌ மற்றும்‌ விளிம்பு நிலையில்‌ இருப்போருக்கு, அரசின்‌ கல்விக்‌ கட்டமைப்புகள்‌ ஒரே நம்பிக்கை. நமது இளைஞர்களில்‌ 60 சதவீதம்‌ பேர்‌ அரசு நடத்தும்‌ பள்ளிகளில்தான்‌ படிக்கிறார்கள்‌.

ASER அறிக்கை

சமூகத்தில்‌ அவர்கள்‌ பெரும்பாலும்‌ வறிய நிலை மற்றும் விளிம்பு நிலையில்‌ இருப்பவர்கள்‌. வருத்தமளிக்கும்‌ வகையில்‌, இந்தப்‌ பள்ளிகளில்‌ கற்றல்‌, கற்பித்தல்‌ தரநிலைகள்‌ அதிக வீழ்ச்சியைக்‌ கண்டுள்ளது. ஒவ்வோர்‌ ஆண்டும்‌ தொடர்ச்சியாக, ASER அறிக்கை எனப்படும்‌ கல்வித்தரம்‌ பற்றிய வருடாந்திர அறிக்கை, அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கற்றல், தேசிய சராசரியை விட மிகவும்‌ குறைவானதாக இருக்கும்‌ அதிர்ச்சி உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறது. 50 சதவீதத்துக்கும்‌ அதிகமான உயர்நிலைப்‌ பள்ளி மாணவர்களால்‌ இரண்டு இலக்க கூட்டல்‌-கழித்தல்களைக்‌ கூட செய்ய இயலவில்லை.‌

தமிழ்நாட்டில்‌ அரசுப்பள்ளி கல்விச்‌ சூழல்‌ தொடர்ந்து சரிந்து வருகிறது. சமூக, பொருளாதார ரீதியாகவும்‌ ஒடுக்கப்பட்டவர்கள்‌ மற்றும்‌ பிறருக்கும்‌ இடையே கற்றல்‌ இடைவெளி கூர்மையாக அதிகரித்து வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின்‌ எதிர்காலத்தில் சமரசம்‌

அறிவுசார்‌ போட்டி உலகிலும்‌, செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ மேம்பட்ட புதிய தொழில்நுட்பங்கள்‌ இயக்கும் பொருளாதாரத்திலும்‌, நமது வறிய நிலை மற்றும்‌ ஒடுக்கப்பட்ட மக்களின்‌ எதிர்காலம்‌ மிகவும்‌ சமரசம்‌ செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளின்றி வெறும்‌ படிப்புச்‌ சான்றிதழ்களைப்‌ பெற்றவர்களாக அவர்கள்‌ வெளியேறுகிறார்கள்‌. தரமான கல்வி இல்லாத நிலையில்‌, அவர்களால்‌ ஒருபோதும்‌ சமூக மற்றும்‌ பொருளாதார பாகுபாடுகளைக்‌ கடந்து கண்ணியத்துடன்‌ வாழ முடியாது. சமூக மற்றும்‌ பொருளாதார பாகுபாட்டுடன்‌ வாழ்வதே அவர்களின்‌ தலைவிதியாக மாறி வருகிறது. இது ஏற்புடையதல்ல, சரிசெய்யப்பட வேண்டியது.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.