ஆசிரியர் தகுதித் தேர்வு, தாள் 2-க்கான தேர்வில் 95 சதவீதம் தேர்வர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்தத் தேர்வை 2,54,224 பேர்  எழுதிய நிலையில், 13798 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 


மத்திய அரசு ஆர்டிஇ எனப்படும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை 2009-ல் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர தேர்வு எழுத வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களுக்கு நடத்தப்படுகிறது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர்.


இதற்கிடையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் ‌1-க்கு 2,30,878 பேரும்‌ மற்றும்‌ தாள் 2-க்கு 4,01,886 பேரும்‌ என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்‌.


அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 1.53 லட்சம் பேர் எழுதினர். 


பிப்ரவரி 3 முதல் 15 வரை தாள் 2 தேர்வு






 

அதைத் தொடர்ந்து தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்‌ (Tentative Answer Key) ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளமான https://trb.tn.nic.in/ என்ற முகவரியில் வெளியிடப்பட்டன.




அதேபோல தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய தேதியில்‌ எந்த அமர்வில்‌ தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Question Paper TRB website-ல் வெளியிடப்பட்டது. தேர்வர்கள்‌ வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணைய வழியில்‌ ஆட்சேபனை தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இறுதி விடைக் குறிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்தது.


இதற்கிடையே தாள் 2-க்கான தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 28) வெளியாகின. இதை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 


95 சதவீதம் தேர்வர்கள் தோல்வி


இதற்கிடையே ஆசிரியர் தகுதித் தேர்வு, தாள் 2-க்கான தேர்வில் 95 சதவீதம் தேர்வர்கள் தோல்வி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்தத் தேர்வை 2,54,224 பேர்  எழுதிய நிலையில், 13,798 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 5.4 சதவீத தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


எனினும் கடந்த ஆண்டு தாள் 2 தேர்வில் 0.08% பேரே தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.