ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார்.




தமிழக  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் கோயிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி,  தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் விருந்தினர் மாளிகை முன்பு செய்தியாளர்களிடம்  கூறும்போது, தமிழகத்தில் உள்ள கல்வி மாவட்டங்களை பொருத்தவரை பழைய மாதிரி அதாவது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இருந்தால் நிர்வாகத்திற்கு வசதியாக இருக்கும் என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துவககப்பட்ட. கல்விமாவட்டங்கள் நிர்வாக நலன் கருதி ரத்து செய்யப்பட்டன. திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை மாற்றி தூத்துக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில், திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை மீண்டும் அமைக்க வலியுறுத்தி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை சிறப்பு கவனமாக தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு துறை ரீதியாக ஆலோசனை செய்து மீண்டும் திருச்செந்தூர் கல்வி மாவட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.



 


கொரோனா கட்டுபாடுகள் குறித்து முதல்வர் அலுவலகம், சுகாதார துறை மூலம் மருந்து வல்லுனர்கள் எல்லாம் சேர்ந்து கொரோனாவின் தாக்கம், வீரியம் எப்படி இருக்கிறது, முககவசம் தேவையா, ஊரடங்கு தேவையா என முடிவு எடுப்பார்கள். அதன் அடிப்படையில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது. ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் அரசின் நிதி நிலையுடன் தொடர்புடையது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. தேர்தல் அறிக்கைகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதேபோல் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்.



 


அரசு பள்ளியில் நடந்தது வரும் கலை திருவிழாவை தனியார் பள்ளியை சார்ந்தவர்களும் பாராட்டுகின்றனர். இறுதியாக வருகிற ஜனவரி 12ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் கலை திருவிழாவில் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மரத்தடி கீழ் அமர்ந்து படித்து வரும் பள்ளிகளுக்கும், பழைய வகுப்பறை கட்டிடங்களை இடித்துவிட்டு வகுப்பறைகள் இல்லாத பள்ளிகளுக்கும் முதலில் முக்கியத்துவம் கொடுத்து பள்ளி கல்வி துறை சார்பில் வருகிற ஜனவரியில் இருந்து புதிய கட்டடங்கள் கட்டும் பணி தொடங்குகிறது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ்  கூறினார்.