சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் நான்காவது நாளாக இன்றும் போராடி வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.


தொடக்கக் கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ 90 சதவீத ஆசிரியர்களின்‌, குறிப்பாக பெண் ஆசிரியா்களின்‌ பதவி உயர்வு வாய்ப்பை‌ பறிக்கும்‌ வகையிலும்‌, தொடக்கக் கல்வித்துறையில்‌ 60 ஆண்டுகாலமாக நடைமுறையில்‌ இருந்த ஒன்றிய முன்னுரிமையை மாற்றி மாநில முன்னுரிமையைக்‌ கொண்டு வந்து ஒரு லட்சத்திற்கும்‌ மேற்பட்ட ஆசிரியார்களின்‌ பணி முன்னுரிமை மற்றும்‌ பதவி உயர்வு ஆகியவற்றைப் பாதிக்கும்‌ வகையிலும்‌ வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்‌ 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும்


கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ தலைமையில்‌, பள்ளிக்கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ தொடக்கக் கல்வி இயக்குநர்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ டிட்டோஜாக்‌ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன்‌ நடைபெற்ற பேச்சுவார்த்தையில்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள்‌ உட்பட அன்று முன்வைக்கப்பட்ட 50 அம்சக்‌ கோரிக்கைகள்‌ உள்ளிட்ட 31 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப்ரவரி 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று, இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. டிட்டோஜேக் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்தது. எனினும் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.


தினந்தோறும் போராட்டம், கைது


தொடர்ந்து தினந்தோறும் போராட்டம் தொடங்கும் நிலையில், காவல்துறையினர் ஆசிரியர்களைக் கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை சமுதாய நலக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்த நிலையில் 4ஆவது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


கடந்த ஆண்டிலும் நடந்த போராட்டம்


பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் டெட் தேர்வு ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடர்ந்தனர். எனினும் பிறகு அவர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.