ஜூலை மாத ‌இறுதிக்குள்‌ 2346 இடைநிலை ஆசிரியர்கள்‌ பணி நியமனம்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அவர் தலைமையில்‌ சென்னை, தமிழ்நாடு பாடநூல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழக கூட்ட அரங்கில்‌ அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்‌ இன்று நடைபெற்றது. பள்ளிக்‌ கல்வித்துறையில்‌ நடப்புக்‌ கல்வியாண்டில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்‌ குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

கருணை அடிப்படையில்‌ பணி

பள்ளிக்‌ கல்வித்துறையில்‌ பணிபுரிந்து பணியிலிருக்கும்‌ போதே காலங்சென்ற ஆசிரியர்கள்‌ மற்றும் பணியாளர்களின்‌ வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில்‌ பணி வழங்கக்‌ கோரி பெறப்படும்‌ கோப்புகளை உடனுக்குடன்‌ ஆய்வு செய்து பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறும்‌ பணி நியமனம்‌ கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்‌.

போக்சோ விசாரணை

போக்சோ வழக்கில்‌ குற்றம்‌ சாட்டப்பட்டுள்ளவர்கள்‌ மீது விசாரணையினை துரிதமாக மேற்கொண்டு விசாரணை அறிக்கையினை உடன்‌ சார்ந்த இயக்ககத்திற்கு அனுப்பி தொடர்‌ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்‌. மேலும்‌, நிலுவையிலுள்ள நீதிமன்ற கோப்புகளின்‌ மீது தனிக்கவனம்‌ செலுத்தி வழக்கினை உடன்‌ முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்‌.

20.06.2025 நாள்‌ வரை 3,35,428 புதிய மாணவர்‌ சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்‌. 14417 கட்டணமில்லா சேவை மையத்தில்‌ பெறப்படும்‌ புகார்கள்‌ மீது மேற்கொள்ளப்படும்‌ நடவடிக்கைகள்‌ சூறித்து கேட்டறிந்தார்‌. மேலும்‌, சமூக நலத்துறை அலுவலர்களுடன்‌ ஒருங்கிணைந்து குழந்தைத்‌ திருமணம் நடைபெறுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ என அறிவுறுத்தினார்‌.

ஜூலை இறுதிக்குள் ஆசிரியர் பணி நியமனம்

தொடக்கக்கல்வி இயக்ககத்தில்‌ வருகிற ஜூலை மாதம்‌இறுதிக்குள்‌ 2346 இடைநிலை ஆசிரியர்கள்‌ பணி நியமனம்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள்‌ நியமனம்‌ செய்திட நிலுவையில்‌ உள்ள நீதிமன்ற வழக்குகளை துரிதமாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்‌.

அனைத்து மாவட்டங்களிலும்‌ பணியாற்றும்‌ 157 மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கு கையடக்கக்‌ கணினிகளையையும்‌, 2024-25ஆம்‌ கல்வியாண்டில்‌ இல்லம்‌ தேடி கல்வித்‌ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல்‌ மாவட்டம்‌ சேலம்‌ இரண்டாவது மாவட்டங்கள்‌ தேனி, திருநெல்வேலி மூன்றாவது மாவட்டம்‌ திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களுக்கு கேடயங்களையும்‌, தமிழ்நாட்டின்‌ பள்ளி மாணவர்களிடையே புத்தாக்கம்‌ மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ சிந்தனையினை வளர்ப்பதற்காக பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்‌ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 38 முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு கேடயம்‌ நினைவுப் பரிசாக வழங்கியும்‌ பாராட்டு தெரிவித்தார்‌.