மாநிலம் முழுவதும் காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (அக்டோபர் 10) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள்களை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 


தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நேற்றுடன் (அக்.09) முடிந்தது.  இதை அடுத்து அனைத்து அரசு,  தனியார் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று (அக்டோபர் 10) திறக்கப்பட்டு உள்ளன. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கி உள்ளன. 


தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு


தொடக்கப் பள்ளிகளில் கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர்களுக்கு அக்.13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் 


இதற்கிடையே பள்ளிகள் திறந்த உடனே, முதல் நாளில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு திருத்தப்பட்ட விடைத் தாள்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மதிப்பெண் குறைந்த பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 


காலாண்டு மதிப்பெண் விவரங்களை ஆசிரியர்கள் எமிஸ் தளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


காலாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


அரையாண்டு தேர்வு எப்போது..? 


1 முதல் 10ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு டிசம்பர் 19ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்றும், 11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் ஏற்கனவே  அறிவிக்கப்பட்டது.


Single Girl Child Scholarship : ஒற்றை பெண்குழந்தையா உங்களுக்கு? என்னென்ன ஸ்காலர்ஷிப் இருக்கிறது? எதற்கு விண்ணப்பிக்கலாம்?