நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கலாமா என்று பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.


மக்களவைத் தேர்தல் எப்போது?


நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. 


இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் 3ஆம் கட்டமாக மே 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. நான்காம் கட்டத் தேர்தல் மே 13, 5ஆம் கட்டத் தேர்தல் மே 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல 6ஆவது கட்டத் தேர்தல் மே 26ஆம் தேதியும் கடைசியாக 7ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதேபோல விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 


ஜூனில் வாக்கு எண்ணிக்கை


7 கட்டத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை, ஒட்டுமொத்தமாக ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 16ஆம் தேதி முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.


தள்ளிப் போகும் பள்ளிகள் திறப்பு


ஜூன் முதல் வாரத்தில் வழக்கமாகப் பள்ளிகள் திறக்கப்படும். 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முடித்து அறிவிப்புகள் வெளியாகத் தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.


முன்னதாக 2023- 24ஆம் கல்வியாண்டில் கோடை வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு ஜூன் 2ஆவது வாரத்துக்குத் தள்ளிப் போனது. குறிப்பாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 


இந்த நிலையில் இந்த ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகள் பொதுத் தேர்வு முன்கூட்டியே தொடங்கி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.