கொரோனா தொற்றால் மூடப்பட்டு சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் இன்று (டிச.6) திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிகள் விழாக்கோலம் பூண்டன. கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. புதுச்சேரியிலும் மூடப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டன. அவை அரை நாள் மட்டும் செயல்பட்டு வந்தன.
கொரோனா தொற்று குறைந்து வந்ததை அடுத்து, நவம்பர் மாதம் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க முடிவு எடுக்கப்பட்டது. எனினும் வடகிழக்குப் பருவ மழையால் நடுநிலைப் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனது. பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (டிச.6) பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அச்சத்தைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், வாரம் 6 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடக்கும். அதே நேரத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அரை நாளும், 9 முதல் 12 ஆம் வகுப்புகள், கல்லூரிகள் ஆகியவை முழு நாளும் செயல்பட உள்ளன.
விழாக்கோலம் பூண்ட பள்ளிகள்:
சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இன்று (டிச.6) திறக்கப்பட்டதால், பள்ளிகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டன. பள்ளிகள் தூய்மை செய்யப்பட்டன. பள்ளி வளாகங்களில் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் முறையாகப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’டிசம்பர் 6ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிய உணவு தரப்படும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை முழு நேரம் பள்ளி தொடங்கிய பிறகு மதிய உணவு தரப்படும். மாணவர் பேருந்துக்கு டெண்டர் விடப் பேசி வருகிறோம். ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ளோரையும் தடுப்பூசி போட அறிவுறுத்தியுள்ளோம். தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்க உள்ளோம்’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்