அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அன்று அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்றது. 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19ம் தேதி தொடங்கிய தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமாக 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில், 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடந்து முடிந்தது.
பள்ளிகள் இன்று திறப்பு:
அதைதொடர்ந்து, கடந்த 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை நிறைவடைந்த நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு இயங்கப்பட உள்ளன. அதேநேரம், 1 முதல் 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை:
முன்னதாக, அரையாண்டு விடுமுறையில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று புகார் எழுந்தது. இதனால், அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் அசைன்மென்ட்டுகளை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முறை:
2022- 2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற்றது. அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வினாத் தாள்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக தேர்வு நாட்களுக்குரிய வினாத் தாள்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தனர். கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத் தாள்களைத் தயாரித்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த முறை அரையாண்டுத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படை பின்பற்றப்பட்டது.