அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனப் பெயர் மாற்றம் செய்ய, என்சிஇஆர்டி குழு பரிந்துரை மட்டுமே செய்துள்ளதாகவும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் என்சிஇஆர்டி விளக்கம் அளித்துள்ளது.


பாரம்பரிய வரலாறு


முன்னதாக அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனப் பெயர் மாற்றம் செய்ய என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்தது. இந்தத் தகவலை என்சிஇஆர்டி குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ’’பழங்கால வரலாறு என்பதற்கு பதிலாக பாரம்பரிய வரலாறு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டும். பள்ளி பாடத் திட்டங்களில் அனைத்து பாடங்களிலும் இந்திய அறிவுசார் அமைப்பு இணைக்கப்பட வேண்டும். 


பாரதம் என்ற பெயர்


அனைத்து வகுப்புகளிலும் மாணவர்களுக்கு பாரத் என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என்று குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. பாரத் என்பது பண்டைய பெயர் ஆகும். 7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த விஷ்ணு புராணம் உள்ளிட்ட பழங்கால நூல்களில் பாரதம் என்ற பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடப் புத்தகங்களில் இந்துக்களின் வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்திருந்தார். 


இதுகுறித்து என்சிஇஆர்டி கூறும்போது, ’’புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்த பணி இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பலதரப்பட்ட, பாடத்திட்டம் சார்ந்த நிபுணர்கள்கள் குழுவிடம் இதுகுறித்து கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செய்தி நிறுவனங்களில் பெயர் மாற்றம் குறித்து வெளியாகும் செய்திகள், முன்கூட்டியே கருத்துத் தெரிவிப்பதாக உள்ளன’’ என்று தெரிவித்துள்ளது. 


பின்னணி என்ன?


கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்பட உலகின் 20 நாடுகளின் தலைவர்களும், சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்ற ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஜி 20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் வழக்கமாக இடம்பெறும் இந்தியக் குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு இருந்தது. இது பெரும் பேசும் பொருளாக மாறியது. 


அதேபோல் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயர் இடம்பெற்றது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமாக இந்தியா என இடம்பெறும் நிலையில் இந்த ஆண்டு பாரத் என இடம்பெற்றது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஜி20 மாநாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பாரதம் என்ற பெயரே இருந்தது. இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றப் போவதாக தகவல்கள் கசிந்தன.


இந்த நிலையில் பெயர் மாற்றம் குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.