தமிழ்நாட்டில் வருகின்ற செப்டம்பர் முதல் நாள் தொடங்கி பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாநில சுகாதாரத்துறை பள்ளிகளுக்கான நிலையான நெறிமுறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளின்படி பள்ளிக்கு வந்த ஒருவாரத்துக்குள் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், ஊசி போடும் வயது வரம்பை எட்டிய மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் அந்த நெறிமுறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, வகுப்பறைகள், நூலகங்கள், சத்துணவு சமையல் கூடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் உட்பட பள்ளி சார்ந்த அனைத்து இடங்களும் தொற்று பாதிப்பு இல்லாமல் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். மாணவர்கள் அடிக்கடித் தொடும் மேசைகள், பலகைகள் உட்பட அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். வகுப்பறைகளில் ஒவ்வொருவரும் ஆறு அடிதூர இடைவெளி விட்டு நிற்கவேண்டும்.வகுப்பறையில்தான் வகுப்புகள் நடத்த வேண்டும் என இல்லாமல் பெரிய ஹாலில் கூட வகுப்புகள் நடத்தலாம். தட்பவெப்பம் அனுமதித்தால் வெளிப்புறத்தில் கூட வகுப்புகளை நடத்தலாம்.
ஷிஃப்ட் முறையில் வகுப்புகளை நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 50 சதவிகித நபர்களுடன் வகுப்புகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சமூக இடைவெளி விட்டு நிற்பதற்கான அடையாளங்களை பள்ளி வகுப்புகள் உட்பட அனைத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும். இந்த நெறிமுறைகள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக் கமிட்டிகள் என அனைவருக்கும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ தெரியப்படுத்தியிருக்க வேண்டும். கைகளை சுகாதாரமாகப் பராமரிப்பது, மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும்’ என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்ததன் அடிப்படையில், பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். வரும் 27-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளார். அந்த மாணவர்கள் இடை நிற்காமல் அரசு பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயில சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என்று கூறினார்.பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்குகிறது என அவர் தெரிவித்திருந்தார்.
அப்போதுதான் அவர், செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
Also Read: மாருதி சுசுகி கார் புக் செய்தீர்களா? டெலிவரிக்கு காத்திருங்கள்... காரணம் இதுதான்!