சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் காகர்லா உஷா, நந்தகுமார், அறிவொளி, எம்.எல்.ஏ., ஹசன் மௌலானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வியில் சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்து, இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழ்நாட்டை உருவாக்க அமைச்சர் அன்பில் மகேஷ் உழைத்து வருவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் இன்று முதல் அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.



 

காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, அரசாணை வெளியிட்டவர் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி என்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், காமராஜருக்கு சென்னை, கன்னியாகுமரியில் நினைவிடம் கட்டியது, காமராஜர் சாலை பெயர் வைத்தது, விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைத்தது என்று அனைத்து பெருமையும் கருணாநிதியையே சாரும் என்றும் பேசினார்.

 

மாணவர்களின் ஆசிர்வாதம்

 

பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் பிரார்த்தனையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என்றும், குலக்கல்வியை எதிர்த்ததால் தான் காமராஜர் முதலமைச்சரானார் என்றும், பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதற்கான அடித்தளமிட்டு, கல்வியில் தனிக் கவனம் செலுத்தியவர் காமராஜர் என்றும் குறிப்பிட்டார். NEP என்றால் No Education Policy என்று பேசிய அமைச்சர், எனவே தான் State Education Policy -ஐ மாநில அரசு வடிவமைத்து வருவதாகவும், நமக்கான கல்வியை நாமே உருவாக்கிக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.



 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைந்து வீடு திரும்பிய உடன் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் ஆகியவற்றை துவக்கி வைப்பார் என்றும், அவருடைய உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருந்து வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், அரசு பள்ளிகளில் மீண்டும் லேப்டாப் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

 

லேப்டாப் தான்..

 

திமுகவின் தேர்தல் அறிக்கையில் Tab வழங்குவோம் என்று கூறியிருந்த நிலையில், அதிகாரிகளிடம் விவாதித்ததில் லேப்டாப் தான் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் டேப் வழங்கும் திட்டத்திற்கு பதிலாக லேப்டாப்பையே தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். கொரோனா பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களுக்காக கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப்புகள் மாநிலம் முழுவதும் வழங்கப்படாத நிலையில், தற்போது 11 லட்சம் லேப்டாப்புகள் வழங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



 

TET தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர கூடுதலாக ஒரு தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை எண் 149-ஐ ரத்து செய்வது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும், அரசுப்பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்திருப்பதாகவும், பள்ளி மாணவர்கள் எப்படி உடை அணிய வேண்டும்? கைகளில் சாதிக் கயிறு, டாட்டூ போட்டுக்கொள்ளக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.