எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமல்படுத்தப்பட்ட அரசாணையைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அலுவலர்கள் தமிழிலேயே கட்டாயம் கையொப்பமிட வேண்டும். அரசு தலைமைச் செயலக துறைகள் ஆங்கிலத்தில் ஆணைகள் வெளியிடும் நேர்வுகளில் இனி ஆங்கிலத்துடன் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. 


தமிழ்‌ ஆட்சிமொழிச்‌ சட்டம்‌ 1956-ல்‌ இயற்றப்பட்டு, தமிழ்நாட்டின்‌ ஆட்சி மொழியாக தமிழ்‌ மொழி இருந்து வருகிறது. எங்கும்‌ தமிழ்‌ எதிலும்‌ தமிழ்‌ என்ற உயரிய இலக்கை அடிப்படையாகக்‌ கொண்டு, தமிழ்‌ ஆட்சிமொழி மற்றும்‌ தமிழ்‌ வளர்ச்சி தொடர்புடைய திட்டங்களை மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள அரசு
அலுவலகம்‌, தன்னாட்சி நிறுவனங்கள்‌, வாரியங்களில்‌ பணியாற்றும் அரசு அலுவலர்கள்‌ செம்மையுற செயற்படுத்தவும்‌ மற்றும்‌ அவர்களின்‌ பயன்பாட்டிற்கும்‌, மேலும்‌ பொதுமக்கள்,‌ மாணவர்கள்‌ மற்றும்‌ தனியார்‌ அமைப்புகள்‌ பயன்படுத்த ஏதுவாக பல்வேறு துறைகள்‌ வாயிலாக அரசாணைகள்‌, கடிதங்கள்‌ மற்றும்‌ குறிப்புரைகள்‌, அறிவுரைகள்‌ வாயிலாகத்‌ தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.


சிறப்புப் பரிசுகள்


ஆட்சிமொழித்‌ திட்டப்‌ பயிற்சிகள்‌, கருத்தரங்குகள்‌, ஆய்வுகள்‌, ஆட்சிசொல்‌ அகராதி உருவாக்கும்‌ தொடர்பணிகள்‌ முதலியன தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை, செந்தமிழ்ச்‌ சொற்பிறப்பியல்‌ அகரமுதலித்‌ திட்ட இயக்ககம்‌ வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்சிமொழித்‌ திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும்‌ மாவட்ட அலுவலகங்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கும்‌ பரிசுகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.


மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி, கலைச்சொல்‌ உருவாக்குதல்‌, இலக்கியத்‌ திறன்‌ போட்டிகள்‌, மாணவர்களுக்கான அகராதியியல்‌ விழிப்புணர்வுத்‌ திட்டம்‌, சொற்குவை, மாணவர்‌ தூதுவர்‌ பயிற்சித்‌ திட்டம்‌ மற்றும்‌ திருக்குறள்‌ முற்றோதல்‌ முதலிய திட்டங்கள்‌ தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ அகர முதலி திட்ட இயக்ககம்‌ வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அயல்‌ மாநிலங்கள்‌ மற்றும்‌ உலகளவில்‌ தமிழ்மொழியை பரப்பும்‌ வகையில், தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில்‌, தெரிவு செய்யப்பட்ட பிறமாநில பல்கலைக்கழகங்களில்‌ தமிழில்‌ பட்டப்படிப்பு பயிலும்‌ மாணவர்களுக்கு ஊக்கத்‌ தொகை மற்றும்‌ பேராசிரியர்‌ நியமனங்களுக்கு அரசின்‌ சார்பாக ஊதியம்‌ வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல்‌, பிறநாடுகளில்‌ உள்ள பல்கலைக்கழகங்களில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ தமிழ்‌ ஆர்வலர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, தமிழ்‌ இருக்கைகள்‌ அமைக்க அரசின்‌ நல்கைத்‌ தொகை வழங்கப்பட்டு வருகிறது. 


தமிழிலேயே கட்டாயம் கையொப்பம்


அந்த வகையில், எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமல்படுத்தப்பட்ட அரசாணையைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதில் பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் எழுதுவதுடன், அவை பற்றிய குறிப்புகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். தமிழிலேயே கட்டாயம் கையொப்பமிட வேண்டும். அரசு தலைமைச் செயலக துறைகள் ஆங்கிலத்தில் ஆணைகள் வெளியிடும் நேர்வுகளில் இனி ஆங்கிலத்துடன் தமிழிலும் வெளியிடப்பெற வேண்டும். அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தங்களின் பெயரின் முதல் எழுத்தை எழுதும்போது ஆங்கில எழுத்தைப் பயன்படுத்தாமல், சரியான தமிழ் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 


முழு விவரத்தைக் காண: