10, 12ஆம் வகுப்பு இரண்டாம் படி (Duplicate) மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் (Certified Copy) போன்ற சேவைகளைப் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து அரசுத்தேர்வுகள்‌ இயக்ககம்‌ கூறி உள்ளதாவது:


''இதுவரை தபால்வழி விண்ணப்பங்களாக பெறப்பட்டு வந்த மதிப்பெண்‌ சான்றிதழ்களின்‌ இரண்டாம்படி (டூப்ளிகேட்), மதிப்பெண்‌ சான்றிதழ்களின்‌ சான்றிட்ட நகல்‌, இடப்பெயர்வுச்‌ சான்றிதழ்‌ – பிற மாநிலங்களில்‌ உயர்கல்வி பயில (Migration Certificate) சான்றிதழ் ஆகியவை இணையவழி விண்ணப்பங்களாகப் பெறுவதற்கான மென்பொருள்‌ வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள்‌ / மாணவர்களின்‌ பயன்பாட்டிற்கு தயார்‌ நிலையில்‌ உள்ளது.


மதிப்பெண்‌ சான்றிதழ்களின்‌ இரண்டாம்படி (Duplicate Marks Certificate)


தபால்வழி விண்ணப்ப நிலை: மாணவர்கள், பொதுமக்கள்‌ அச்சடிக்கப்பட்ட விண்ணப்பத்தில்‌ விவரங்களை பதிவு செய்து தபால்‌ /நேரடியாக அந்தந்த மாவட்ட உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து சென்னை, தலைமை அலுவலகத்தில்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு இரண்டாம்படி மதிப்பெண்‌ சான்றிதழ்‌ அச்சடிக்கப்பட்டு உதவி இயக்குநர்‌ அலுவலகம்‌ மூலம்‌ மாணவர்கள்‌ / பொதுமக்களுக்கு சான்றிதழ்‌ அனுப்பி வைக்கப்படுகின்றன.


இணையவழி விண்ணப்ப நிலை: மாணவர்கள்‌, பொதுமக்கள்‌ இணையத்தில்‌ விண்ணப்பிக்கவேண்டும்‌. இணைய வழி விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டவுடன்‌ விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, இணைய வழி விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சான்றிதழ்‌ அனுப்பிவைக்கப்படும்‌.


மதிப்பெண்‌ சான்றிதழ்களின்‌ சான்றிட்ட நகல்‌ / Certified Copy of Mark Certifcate மற்றும்‌ இடப்பெயர்வுச்‌ சான்றிதழ்‌ ( பிற மாநிலங்களில்‌ உயர்கல்வி பயில ) - / Migration Certificate (For pursuing Higher Education in other States)


தபால்வழி விண்ணப்ப நிலை: மாணவர்கள்‌, பொதுமக்கள்‌ அச்சடிக்கப்பட்ட விண்ணப்பத்தில்‌ விவரங்களை பதிவு செய்து தபால்‌ (நேரடியாக சென்னை, தலைமை அலுவலகத்தில்‌ பெறப்பட்டு சான்றிதழ்‌ அச்சடிக்கப்பட்டு மாணவர்கள்‌ / பொதுமக்களுக்கு விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சான்றிதழ்‌ அனுப்பி வைக்கப்படுகின்றன.


இணையவழி விண்ணப்ப நிலை: மாணவர்கள், பொதுமக்கள்‌ இணையத்தில்‌ விண்ணப்பிக்கவேண்டும்‌. இணைய வழி விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டவுடன்‌ விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு இணைய வழி விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல்‌முகவரிக்கு மின் சான்றிதழ் ஆக‌ அனுப்பிவைக்கப்படும்‌.


தபால்வழி விண்ணப்பத்தில்‌ விண்ணப்பங்கள்‌ துறையை அடைவதற்கு காலவிரயம்‌ ஏற்படுவதுடன்‌ விண்ணப்பங்களை கண்டறிவதில்‌ சிரமமும்‌, விண்ணப்பநிலை குறித்த விவரங்களை பயனாளர்கள்‌ அறிந்துகொள்ள இயலாத நிலையும்‌ உள்ளது.


விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது மாணவர்கள்‌ / பொதுமக்கள்‌ அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்யாமல்‌ பிழையுடன்‌ பூர்த்தி செய்து விண்ணப்பித்து விடுவதால்‌ அவர்களது விண்ணப்பங்களின்மீது துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க இயலாமல்‌ திரும்ப அனுப்பும்‌ நிலை உருவாகிறது. இதைத் தவிர்க்க இணையவழி முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


பொதுமக்கள்‌, மாணவர்கள்‌ www.dge.tn.gov.in இணையதளத்தில்‌ இதற்கு விண்ணப்பிக்கலாம்‌.