தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் நெஞ்சு வலி வந்தபோதும், வண்டியை ஓரமாக நிறுத்தி, குழந்தைகளைக் காத்து தன்னுயிரை விட்ட நிலையில், அவரின் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி அளித்துள்ளார்.  


திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் நெஞ்சு வலி வந்தபோதும், வண்டியை ஓரமாக நிறுத்தி, குழந்தைகளைக் காத்து தன்னுயிரை விட்ட சம்பவம் ஒருசேர சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.


5 லட்ச ரூபாய் நிதியுதவி


இந்த நிலையில், பள்ளிக்‌ குழந்தைகளை காப்பாற்றி பின்னர்‌ தன்னுயிர்‌ நீத்த தனியார்‌ பள்ளி வாகன ஓட்டுநர்‌ சேமலையப்பன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ 5 லட்ச ரூபாய் நிதியை அளித்துள்ளார்.


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி உள்ளதாவது:


’’திருப்பூர்‌ மாவட்டம்‌, வெள்ளகோவிலில்‌ உள்ள தனியார்‌ பள்ளியில்‌ வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்த காங்கேயம்‌, சத்யா நகரைச்‌ சேர்ந்த சேமலையப்பன்‌ (வயது 49) என்பவர்‌ 24.07.2024 அன்று மாலை பள்ளி முடிந்தவுடன்‌ பள்ளிக்‌ குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை - திருச்சி நெடுஞ்சாலை வெள்ளகோவில்‌ பழைய காவலர்‌ குடியிருப்பு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால்‌ உடனடியாக, தான்‌ ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில்‌ இருந்த பள்ளிக்‌ குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும்‌ ஏற்படாத வகையில்‌ பத்திரமாக நிறுத்தி பின்னர்‌ உயிர்‌ நீத்தார்‌ என்ற செய்தியைக்‌ கேட்டு மிகவும்‌ வருத்தமும்‌, வேதனையும்‌ அடைந்தேன்‌.


கடமை உணர்ச்சியையும்‌ தியாக உள்ளத்தையும்‌ தலைவணங்கிப் போற்றுகிறோம்‌


தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும்‌ தன்‌ பொறுப்பிலிருந்த பள்ளிக்‌ குழந்தைகளின்‌ விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர்‌ தனது இன்னுயிரை இழந்த சேமலையப்பன் கடமை உணர்ச்சியையும்‌ தியாக உள்ளத்தையும்‌ நாம்‌ தலை வணங்கிப் போற்றுகிறோம்‌.


காலம்‌ சென்ற பள்ளி வாகன ஓட்டுநர்‌ சேமலையப்பன்‌ ‌குடும்பத்தினருக்கும்‌ அவர்களது உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சேமலையப்பன்‌ ‌குடும்பத்தினருக்கு ரூபாய்‌ ஐந்து இலட்சம்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌’’.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பள்ளியில் இன்று அஞ்சலி


இதற்கிடையே வெள்ளகோவிலில் உள்ள தனியார் பள்ளியில், உயிரிழந்த் ஓட்டுநரின் புகைப்படத்துக்கு மாணவர்களும் பெற்றோர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.