தமிழக அரசின் கல்விக்கான திட்டங்கள்


கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை பல்வேறு உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கவும் காலை மற்றும் மதிய உணவு திட்டம், இலவச பேருந்து பயண அட்டை, இலவச மிதிவண்டி, கல்வி உதவித்தொகை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு தரம் வாய்ந்த லேப்டாப் வழங்கும் திட்டத்தையும் விரைவில் தொடங்கவுள்ளது. 

Continues below advertisement


மாணவர்களுக்கு உதவித்தொகை


இந்த நிலையில் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் 10ஆயிரம் ரூபாய் முதல் 25ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் இணைய விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் , முனைவர் பட்ட மேலாய்வாளர் போன்ற வல்லுநர்களின் திறமைகளை பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு "தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்" என்ற திட்டத்தினை 2024-2025 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. 


இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கருக்கு மாதம் ரூ.10,000 வீதம் (6 மாதத்திற்கும்) முனைவர் பட்டம்/முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் (3 வருடத்திற்கும்) உதவித்தொகையாக வழங்கப்படும். எனவே இந்த திட்டத்தில் இணைய பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 
மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும் மற்றும் மாணாக்கர் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?


மேலும் 2025-2026 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்க புதிய இணையதளம் "fellowship.tntwd.org.in" உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில்  இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை இவ்விணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 2026 ஆம் கல்வியாண்டிற்கு தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் 12.11.2025 நாளிலிருந்து 12.12.2025 நாள்வரை இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மாணாக்கர்கள் மேற்காணும் திட்டத்தினை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.