பிஎச்.டி படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைத்  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பிஎச்.டி எனப்படும் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை, அண்மையில் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் படிக்க ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முழுநேரமாக பிஎச்.டி. படித்து வரும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் ஆராய்ச்சிப் படிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் 2013-2014ஆம் கல்வியாண்டு முதல், முழுநேர முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாகத் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதையடுத்து, முனைவர் படிப்பைப் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கியது.


அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டது. திமுக அரசு தாக்கல் செய்த புதிய பட்ஜெட்டில், முனைவர் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் மறு சீரமைக்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் கல்வி உதவித் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்படும். இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 16 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 




அதன்படி ஒவ்வொரு வருடமும் 1,600 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கவும், உதவித் தொகை பெறும் மாணவர்களின் குடும்ப வருமானத்தை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 


இதில் பயன்பெறும் முனைவர் படிப்பு படிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச வயது 50 ஆகவும் பெண்களுக்கு 55 ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளது. 


ஏற்கெனவே பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பிற கல்லூரி நிறுவனங்களில் பணியாற்றி வருவோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. அவர்கள் விடுப்பில் இருந்தாலும் பொருந்தாது.


இதில், ஆதிதிராவிடர்கள், கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வேறு எந்த வகையான உதவித் தொகையையும் பெறாமல் இருந்தால் மட்டுமே, அவருக்கு தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும்.


இவ்வாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண