பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் மீண்டும் இந்தக் கலந்தாய்வில் கலந்துகொண்டு தலைசிறந்த இடங்களைப் பெறலாம். 


பொறியியல் 4 கட்டக் கலந்தாய்வுகள் மற்றும் துணைக் கலந்தாய்வுகள்  நிறைவு பெற்றுள்ளன. இதில் 446 பொறியியல் கல்லூரிகள் கலந்துகொண்டன. இதற்கிடையே முதல்கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. கட் - ஆப் மதிப்பெண் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றனர்.


கலந்தாய்வு:


இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 25 முதல் 27ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.13 முதல் அக்.15 வரையிலும் நடைபெற்றது. நான்காம் கட்டக் கலந்தாய்வு அக்.29ஆம் தேதி தொடங்கி அக்.31 வரை நடைபெற்றது.


கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற புதிய முறையும் நடப்பாண்டு முதல் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் எனத் தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின்போது செலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.




4ஆவது கட்டக் கலந்தாய்வு முடிவில், 30,938 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 3,660 பேருக்கு அரசு ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் இடம் உறுதி செய்யப்பட்டு, வழங்கப்பட்டது. 


இதன்மூலம் மொத்தமாக 93,571 இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன. இதுவே கடந்த ஆண்டு 4ஆவது கட்டக் கலந்தாய்வின் முடிவில் 88,596 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் இந்த ஆண்டு 60.65 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது 60 ஆயிரத்து 707 இடங்கள் இன்னும் காலியாக  உள்ளன. முன்னதாக, துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 13ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. 


துணைக் கலந்தாய்வு


துணைக் கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 6,301 பேருக்கும் தொழிற்பிரிவில் 125 பேருக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டின்கீழ் பொதுப் பிரிவில் 645 பேருக்கும் தொழிற்பிரிவில் 8 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 


ஆதி திராவிடர் மாணவர்களுக்கான கலந்தாய்வு


இந்த நிலையில் எஸ்.சி.ஏ டூ எஸ்.சி. கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இதன்மூலம் ஆதிதிராவிடர் அருந்ததி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் காலியாக உள்ள பொறியியல் இடங்கள் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும். 


இதன்படி நாளை (நவம்பர் 24) காலை 10 மணி முதல் மாணாவர்கள் விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவினைத் தேர்வு செய்யலாம். மாலை 7 மணி வரை மட்டுமே இதை மேற்கொள்ள முடியும். பொதுக் கலந்தாய்வு மற்றும் துணைக் கலந்தாய்வில் இடம்பெற்று, தங்களின் இடங்களுக்கான ஒதுக்கீடு ஆணை பெற்ற எஸ்சி மாணவர்கள் மட்டுமே இதில் பங்குபெறத் தகுதி உடையவர்கள். 


இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு அடுத்த நாளே, அதாவது நவம்பர் 25ஆம் தேதியே வழங்கப்படும். மாணவர்கள் அன்று மாலை 5 மணிக்குள் தங்களுக்கான இடங்களை உறுதி செய்ய வேண்டும். அன்று இரவு 7 மணிக்குள் இறுதி ஒதுக்கீடு செய்யப்படும். 


தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-22351014 / 1015, 1800-425-0110


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tneaonline.org/