குறைவான எஸ்சி மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருத்துதாசு காந்தி என்பவரிடமிருந்து பெறப்பட்ட மனுவின் நகல் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் எஸ்சி மாணவர் சேர்க்கை 20% க்கு மேலுள்ளது என்றும் அரசுப் பள்ளி உட்பட சில ஆயிரம் பள்ளிகளில் எஸ்சி மாணவர் சேர்க்கை 18%க்குக் கீழாகவும் , 1000 பள்ளிகளில் 5%-க்குக் குறைவாகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தற்போது எஸ்சி மாணவர் சேர்க்கை 18% க்குக் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து எஸ்சி மாணவர் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’.
இவ்வாறு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக கிருத்துதாசு காந்தி அனுப்பியுள்ள மனுவில், ''தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் எஸ்சி மாணவர் சேர்க்கை விகிதம், பொதுக் கல்வி விகிதத்திற்கு இணையாக வளர்ந்துள்ளது என்பது மாநிலப் பெருமை.
தமிழ்நாட்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் 13,000 பள்ளிகளில் எஸ்சி மாணவர் சேர்க்கை 20%-க்கு மேலுள்ளது. சில ஆயிரம் பள்ளிகளில் 50 %-க்கு மேலும் உள்ளனர். ஆயினும் வேறு 10,000 பள்ளிகளில் (அரசுப் பள்ளிகள் உட்பட) எஸ்சி மாணவர் சேர்க்கை 18%-க்குக் கீழாகவே உள்ளது.
1000 பள்ளிகளில் இது 5%-க்குக் குறைவாகவும், 100 பள்ளிகளில் 0% ஆகவும் உள்ளது. இதுபற்றிய புள்ளிவிவரங்களை 2005 முதல் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வந்தும் இது பற்றிய ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் இல்லை.
தற்போதாவது 18%-க்குச் சான்றோர்ச் சேர்க்கைக்குக் குறைவான பள்ளிகளின் ஆய்வை மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்து, எஸ்சி மாணவர் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்'' என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்