தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த நிலையில், மாணவர்களுக்கு அந்தந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் கோட்டை மகளிர் மேல் நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 



அப்போது ஜாகிர் உசேன் என்பவர் தனது மகளுடன் மாற்றுச் சான்றிதழ் வாங்க வந்துள்ளார். பெற்றோர் ஆசிரியர் கழகம், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான கணினி கட்டணம், வினாத்தாள் கட்டணம் என 515 ரூபாய் எந்தவித ரசீதும் இல்லாமல் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கான ரசீதை வழங்கும் படி பெற்றோர் கேட்டபோது, துண்டுச் சீட்டில் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ. 50, மாணவி 11 ஆம் வகுப்பில் கணினி பயன்படுத்தியதற்கு ரூ.200, அதேபோன்று 12 ஆம் வகுப்பிற்கு 200 ரூபாய் மற்றும் வினா தாளுக்கு 65 ரூபாய் என மொத்தம் 515 ரூபாய் என அங்கிருந்த ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். மேலும் இந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டும்தான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி புதிதாக மாணவர் சேர்க்கையில் சேரும் விண்ணப்பக் கட்டணம் 20 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து வந்த அலுவலர்கள் விசாரணை நடத்தினர். முறையாக ரசீது வழங்கி பணம் வசூலிக்கும்படி அலுவலர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் ரசீதுகள் வழங்கி கட்டணம் வசூலிக்கப்பட்டது.



இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தொடர்ந்து பள்ளி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. மாணவர்களிடம் வசூலிக்கப்படும் பணத்திற்கு முறையான ரசீது வழங்கப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போன்று அனைத்து மாணவர்களிடம் இருந்தும் பணம் வசூலிக்கப்படவில்லை. குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே பள்ளி நிர்வாகம் பணம் வசூலித்தது என்று கூறினர்.


பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்திய முதன்மை கல்வி அலுவலர் முருகன், வினாத்தாள் கட்டணம் மட்டும் வசூல் செய்யும்படியும், மீதமுள்ள கட்டணங்களை வசூல் செய்ய வேண்டாம் என்றும்  தெரிவித்துள்ளார். ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பணம் அந்தந்த பெற்றோர்களிடம் வழங்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்ப படிவத்தினை 20 ரூபாய்க்கு விற்பனை செய்தது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண