சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகந்நாதனின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். இவருக்கு மே 19, 2025 வரை பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகந்நாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் வர்த்தக ரீதியான நிறுவனம் தொடங்கியுள்ளதாக புகார் வந்தது.
கைது செய்யப்பட்ட துணை வேந்தர்
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனை, சேலம் மாநகர் கருப்பூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஜெகநாதன் தனது நண்பர்களுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக புகார் எழுந்தது. அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை தொடங்க அனுமதி இல்லாத நிலையில் ஜெகநாதன் நண்பர்களுடன் இணைந்து பங்குதாரராக இருந்துள்ளார்.
இது உறுதி செய்யப்பட்டதால் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.
கடும் விமர்சனங்கள்
முந்தைய காலங்களில் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஆகியோர் கைது செய்யப்பட்ட போது, உடனடியாக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்படாமல், துணை வேந்தராகவே தொடர்ந்தார்.
இதற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. துணை வேந்தரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. எனினும் ஆளுநர் அதற்கு செவிமடுக்கவில்லை.
அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகந்நாதனின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். நாளையுடன் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், அவருக்கு மே 19, 2025 வரை பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜெகந்நாதனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது பேசுபொருளாகி உள்ளது.