பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற இருந்த தேர்வுகள் கன மழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வாணையர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல்:
ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடத்த சனிக்கிழமை நண்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாநகர், ஓமலூர், எடப்பாடி, ஆத்தூர், வீரபாண்டி, வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழையாக பெய்யத் தொடங்கிய நிலையில், நேற்று காலை முதல் இடைவிடாமல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெளிய செல்ல முடியாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெரியார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு:
புயல் காரணமாக கன மழை பெய்து வரும் நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்திற்குள்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை இன்று (02.12.2024) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடைபெறும் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பெரியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரிகள், மாணவர்களுக்கு இத்தகவலை தெரிவிக்க வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத் தேர்வாணையர் கதிரவன் கூறியுள்ளார்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
சேலம் மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்ததால் இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
குறிப்பாக, சேலம் மாநகர பகுதியான அரசு மருத்துவமனை, சூரமங்கலம், குகை, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை , நான்கு ரோடு, ஐந்து ரோடு, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் அஸ்தம்பட்டி பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் நனைந்தபடியே சென்றனர். கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில், ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் தொடர்மழை பெய்து வருவதால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. மழையானது தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
நேற்று ஆரஞ்சு அலர்ட்:
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அதிகளவில் வந்து காய்கறிகள் வாங்கி செல்லும் நிலையில் மழை காரணமாக பொதுமக்கள் வர முடியாததால் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. தொடர் மழையால் சேலத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனிடையே சேலம் மாவட்டத்திற்கு நேற்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான பாதுகாப்பு பணிகளை மாவட்டம் நிர்வாகம் மேற்கொண்டது. இன்றும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கண்காணிப்பு அறையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த வருகின்றனர். மேலும், மாநகர பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி பணியாளர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.