தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து கடந்த 5 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பிற்கும், 6 ஆம் தேதி பத்தாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றைய தினம் பொதுத் தேர்வு தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா தோற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் நடப்பு ஆண்டில் நேரடியாக பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.



சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட 20,825 மாணவர்களும், 21,253 மாணவிகளும் எனக்கு மொத்தம் 42,078 பேர் பிளஸ் 1 வகுப்பு தேர்வு எழுதவிருந்தினர். இதில் 39,232 மாணவர்கள் வருகைதந்து தேர்வு எழுதினார். 2,846 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி கோட்டை அரசு மகளிர் பள்ளியில் நேற்று 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர் அப்போது ஒரு மாணவி துண்டு சீட்டை வைத்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவியை அறை கண்காணிப்பாளர் கண்டறிந்து மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர் இடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 



மேலும் இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது மேலும் அவரது விடைத்தாள் தனியாக திருத்தும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்ந்து இனி வரும் தேர்வுகளை அந்த மாணவி தொடர்ந்து எழுதலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. இதன் காரணமாகவே மாணவர்கள் சரியான முறையில் படிக்காமல் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கு தனி குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் முழுமையாக தேர்வில் இருந்து நீக்கப்பட்டால் மன உடைச்சல் ஏற்படும் என்பதற்காக தேர்வில் முறைகேடு செய்த மாணவ, மாணவிகள் அடுத்து வரும் தேர்வுகளை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.