இலவச கட்டாயக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நிலுவை கல்விக் கட்டணத்தை, அரசு உடனே வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
மத்திய அரசு அறிமுகம் செய்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்புவரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். இவர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கும்.
இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வியாண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 20ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பப் பதிவு ஒரு மாதத்துக்கு ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கட்டாய கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டண நிலுவைத் தொகையை அரசு உடனே வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து டிபிஐ வளாகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்துக்கு, தமிழக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (FePSA) வைத்துள்ள கோரிக்கை:
''மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) சுயநிதிப் பள்ளிகளில் ஆரம்ப வகுப்பில் 25% இலவசமாக சேர்க்கை செய்ய, மாணவர்களை தேர்வு செய்து அரசே அந்தந்த பள்ளிக்கு அனுப்புகிறது. அனைத்துப் பள்ளிகளும் அம்மாணவர்களிடம் கட்டணம் வாங்காமல் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பித்து வருகிறோம்.
2021-22 கல்வி கட்டணமே வரவில்லை
RTE சட்டப்படி இலவசமாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகும் செலவை, அரசு அதே கல்வி ஆண்டிலேயே இரண்டு தவணைகளாக வழங்க வேண்டும். ஆனால் 2021-22 கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தையே அரசு இன்னும் பள்ளிகளுக்கு வழங்கவில்லை. மேலும் 2022-23 ஆம் கல்வி ஆண்டும் முடியும் நிலையில் உள்ளது. ஆனால் இவ்வாண்டிற்கான Team Visit கூட இன்னும் வரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அடுத்த 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
2 ஆண்டு கல்விக் கட்டணத்தை இதுவரை வழங்காத பள்ளிக்கல்வித் துறையின் இவ்வாறான அலட்சியப் போக்கால் பள்ளி நிர்வாகிகள் பள்ளி நடத்துவதற்கே தடுமாறுகின்றனர். பலர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட இயலாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் கால்வாசி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு அந்தந்த கல்வி ஆண்டிலேயே வழங்காததால், பள்ளி நிர்வாகம் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
கல்விக் கட்டணத்தை உயர்த்துக
அதேசமயம், பள்ளிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை அரசு மிக மிக அதிகரித்துள்ளது. அதாவது மின் கட்டணம், சொத்து வரி, பள்ளி புதுப்பித்தல் கட்டணம், வைப்புத்தொகை, ஆய்வு க்கட்டணம் ஆகிய அனைத்து கட்டணங்களையும் அரசு அதிகரித்துள்ளது. ஆனால் பள்ளி மாணவர்களிடம் வாங்க வேண்டிய கல்விக் கட்டணங்களை அதே அடிப்படையில் உயர்த்த வேண்டும். அதுவும் இல்லை. அரசு ஒதுக்கீடு செய்யும் மிக குறைந்த கல்வி கட்டணத்தையும் 2 ஆண்டுகள் கழித்தே வழங்குகிறது.
பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய RTE கட்டணத்தை பள்ளிகளுக்கு வழங்கும்வரை அந்தந்த ஆண்டிற்கான மின் கட்டணம், சொத்துவரி, ESI போன்ற கட்டணங்களைச் செலுத்த கால அவகாசம் வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
RTE திட்டத்தில் 25% மாணவர்களை சேர்க்க அரசு எங்களை வற்புறுத்தாமல் இருந்தால், நாங்கள் அனைத்து மாணவர்களிடமும் கட்டணம் பெற்று சிறப்பாக பள்ளிகளை நடத்துவோம். ஆகவே, இதுவரை வழங்காமல் உள்ள 2021-22 க்கான கல்விக் கட்டணத்தை பிப்ரவரி மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
அதேபோல இந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டடத்தை வரும் மே மாத இறுதிக்குள் வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில் அடுத்த 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 25% இலவச சேர்க்கையை எங்கள் பள்ளிகளில் சேர்ப்பது பற்றி பரிசீலனை செய்ய வேண்டி வரும்''.
இவ்வாறு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.