தனியார் பள்ளிகளில் 25% இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் RTE எனப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி (Right To Education) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்ந்து படிக்கலாம். இந்தச் சட்டத்தின்கீழ் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவ - மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை பள்ளிக் கல்வித்துறையே செலுத்தும். இந்த நிலையில் 2025- 26ஆம் ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டத்தின்படி 2022 - 2023ஆம்‌ கல்வியாண்டிற்கு 25% ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழத்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதிப்‌ பள்ளிகளில்‌ நுழைவு நிலை வகுப்பில்‌ (எல்கேஜி அல்லது முதல்‌ வகுப்பு) சேர விண்ணப்பிக்கலாம். 

என்னென்ன ஆவணங்கள் தேவை?

  1. பிறப்புச் சான்றிதழ்‌
  2. சாதிச்‌ சான்றிதழ்‌
  3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்‌ கீழ்‌ விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்‌
  4. நலிவடைந்த பிரிவின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க பெற்றோரின்‌ ஆண்டு வருமானம்‌ ரூ.2 லட்சத்திற்கும்‌ கீழ்‌ உள்ள வருமானச்‌ சான்றிதழ்‌
  5. இருப்பிடச்‌ சான்றிதழ்

விண்ணப்பிப்பது எப்படி?

பெற்றோர்கள்‌ இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்,‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய அலுவலகங்களில்‌ கட்டணமின்றி விண்ணப்பிக்கவு‌ தக்க ஏற்பாடுகள்‌ செய்யப்படும்.

இதற்கிடையே 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கியது. பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பித்தனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 3 அல்லது 4ஆம் வாரத்தில் வழக்கமாக இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்குவது குறிப்பிடத்தக்கது. 

கூடுதல் விவரங்களுக்கு: 14417

இ- மெயில்: rtetnqueries@gmail.com