அரசுப் பள்ளி மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக, அமெரிக்க வாழ் தமிழர்களின் பங்களிப்பில் செயல்படும், தமிழ்நாடு அறக்கட்டளை அமைப்பு மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, 14 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியுள்ளது.


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் விளிம்பு நிலையில் கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னையில் செயல்படும் தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் இளங்கோ கூறும்போது, ''தமிழர்களின் பாரம்பரியக் கலைகள், இசை நிகழ்ச்சிகள், உரை அரங்குகள், நடன நிகழ்ச்சிகள் எனப் பலவிதமான நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் மூன்று நாட்கள் நடத்தி, இந்த 14 கோடி ரூபாய் நிதியைத் திரட்டி இருக்கின்றனர்.


இந்தத் தொகை அப்படியே வங்கியில்  வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு அதில் இருந்து நிதி பெறப்படும். அந்த நிதி தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் செயல்படும் அரசின் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் வசதிகளுக்காகவும், கற்றல் மற்றும் கற்பித்தலுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதற்கும் பயன்படுத்தப்படும்'' என்று தமிழ்நாடு அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அறக்கட்டளை ஏற்கெனவே தமிழ்நாட்டில் 92 அரசுப் பள்ளிகளில் 107 தன்னார்வ ஆசிரியர்களை நியமித்து, அவர்கள் மூலம் ABC என்கிற திட்டத்தின்வழி 10ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் மேம்பாட்டுப் பயிற்சியும், ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.


அரசுப் பள்ளிகளில் இருந்து சில பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கற்பித்தல் வளங்களை மேம்படுத்தவும், குறிப்பிட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனக்  குறிப்பிட்டார்.




தமிழ்நாடு அறக்கட்டளையுடன் கல்வி, பயிற்சி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளில் இணைந்து செயல்பட்டு வரும் ஆசிரியரும் எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமார் இதுகுறித்துப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறும்போது, ’’கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் சின்னாபின்னமாகிக் கிடந்தபொழுது அமெரிக்காவில் மொய் விருந்து உதவிக்கரம் நீட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர்கள் அமெரிக்க வாழ் தமிழர்கள்.


தமிழ்நாடு அறக்கட்டளை மூலமாகப் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் 22 லட்ச ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளோம். நிலங்கள் சீரமைப்பு, சோலார் மூலம் இயங்கும் தெரு விளக்குகள், எளிய வாழிடங்கள், 5000 தென்னங்கற்றுகள் எனப் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர். அதேபோல 5 நபர்களுக்கு வீடுகள் புனரமைப்பிற்குத் தலா 52 ஆயிரம் ரூபாயும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 குடும்பங்களுக்கு 50 ஆட்டுக்குட்டிகளும் கொடுத்து உதவினர்’’ என்று சிகரம் சதிஷ் தெரிவித்தார்.