தமிழகத்தில் சமீபகாலமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் துயரங்களும் தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
அதிர்வலைகளை ஏற்படுத்திய 4 தற்கொலைகள்
கடந்த ஜூலை 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த சம்பவமும் அதைத் தொடர்ந்த வன்முறையும் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்றைய தேதி வரை (ஜூலை 26) தமிழகத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது மாணவர்கள், பெற்றோர் மத்தியிலும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை 22ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால், தாய் திட்டியதால் கழிப்பறையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கு மத்தியில் நேற்று (ஜூலை 25) திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியின் விடுதியில் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் கடலூர் அருகே விருத்தாச்சலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி இன்று (ஜூலை 26) வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகுமாறு பெற்றோர்கள் கூறிவந்த நிலையில், மாணவி இந்த முடிவை எடுத்துள்ளார்.
4 தற்கொலை முயற்சிகள்
சம்பவம் 1: சேலம் மாவட்டம், மேச்சேரி அரசுப் பள்ளி பிளஸ்-2 மாணவி, 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலைக்கு முயன்றதில் அவரின் கால் முறிந்தது. மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் 2: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசுப் பள்ளியில் பிராக்டிகல் வகுப்புகளில் பார்த்து எழுதிய மாணவியிடம் பெற்றோரை அழைத்துவரச் சொல்லி இருக்கிறார் சம்பந்தப்பட்ட ஆசிரியர். உடனே மாடியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார் அந்த மாணவி. இதில் மாணவியின் இடுப்பு விலா எலும்பு முறிவு ஏற்பட்டு கை, கால்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் 3: தாராபுரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் படித்து வருகிறார். சமீபத்தில், தேர்வை சரியாக எழுதவில்லை என்பதற்காக, சமூக அறிவியல் ஆசிரியர் திட்டியுள்ளார். மனமுடைந்த மாணவன், பிளேடால் கை மணிக்கட்டில் கீறிக் கொண்டார்.
சம்பவம் 4: காஞ்சிபுரம், ஓரிக்கை தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தமிழகத்தில் சமீபகாலமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் துயரங்களும் தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? என்னதான் தீர்வு?- ஏபிபி நாடு சார்பில் நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.
ஊரடங்கும் சமூகவலைதளங்களும் முக்கியக் காரணம்: மருத்துவர் சரண்யா ஜெயக்குமார், கல்வி உளவியலாளர்
''ஊரடங்கு காலத்தில் நிறையக் குழந்தைகளுக்கு படிப்பில் தொடர்பு குறைந்துவிட்டது. வெகுசில குழந்தைகள் மட்டுமே கற்றலுடன் முழுமையாகத் தொடர்பில் இருந்தனர். ஆனால் நிறையப் பேருக்குப் படிப்பில் தொடர்பும் ஆர்வமும் போய்விட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, சிறிய வகுப்பு மாணவர்களால் சமாளித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் 7ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள், 2 ஆண்டுகள் லாக்டவுனுக்குப் பிறகு 10ஆம் வகுப்புக்கும், 8ஆம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்புக்கும் வந்த மாணவர்களால் இதைச் செய்ய முடிவதில்லை.
மலைப்பை, ஏமாற்றத்தை எதிர்கொள்கிறார்கள். இத்துடன் நண்பர்களுடன் ஏற்படும் பிரச்சினைகள், சமூகத் தொடர்புகளில் உண்டாகும் சிக்கல்களையும் அவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை. இன்று சண்டையிடும் நண்பன் நாளை பேசுவான், இன்று ஆசிரியர் திட்டினால் நாளை சரியாகிவிடுவார் என்று மாணவர்கள் யோசிப்பதில்லை.
அதீத சிந்தனைகள்
'எல்லோரும் என்னை ஒதுக்கி வைக்கிறார்கள்; குறிவைக்கிறார்கள். எனக்குத்தான் இவ்வளவு பிரச்சினை!' என்று அதீதமாகச் சிந்திக்கிறார்கள். 'எனக்கு இனி வாழ்க்கையே வேண்டாம்' என்று முடிவுசெய்கிறார்கள். இது 100% தவறு.
சமூக வலைதளங்களின் தாக்கம்
இன்றைய தலைமுறையினர் கேட்ஜெட்டுகளுடன் செலவிடும் நேரம் மிக அதிகம். அதனால் தனிமையை அவர்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இன்ஸ்டாகிராம் மாதிரியான தளங்களில் பிரபலங்களைப் பின்தொடர்கிறார்கள். 'எனக்கு அவர்களைப்போன்ற கச்சிதமான வாழ்க்கை இல்லையே' என்று ஏங்குகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது'' என்கிறார் மருத்துவர் சரண்யா.
ஒரு ரோஜா பூக்க, 50 கிலோ யூரியாவா?- தேவநேயன், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்
'' இன்றைய நவீனக் குழந்தைகள் தொழில்நுட்பம் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். தகவல் நிறைந்த உலகில், எது சரி, எது தவறு என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட நாம் உதவுவதில்லை. சமூக வலைதளங்கள் மூலம் தேவையானதைவிட தேவையற்றதைத்தான் குழந்தைகள் அதிகம் தெரிந்துகொண்டிருக்கின்றனர்.
குழந்தை வளர்ப்பில், ஆரம்பத்தில் இருந்தே எல்லாவற்றுக்கும் சரி, சரி என்று சொல்லி பழக்கிவிடுகிறோம். 'இல்லை, வேண்டாம்!' என்ற சூழல் ஏற்படும்போது, அதை அந்தக் குழந்தை ஏற்றுக் கொள்வதில்லை. 'நான்தான் டாக்டர், கலெக்டர், இன்ஜினியர் ஆகவில்லை. நீயாவது ஆகவேண்டும்' என்று தன்னுடைய எதிர்பார்ப்பைக் குழந்தை மேல் பூசுகிறோம். அவர்களின் விருப்பத்தை, ஆர்வத்தைக் காணாமல் கடந்து செல்கிறோம்.
அதேபோல கொரோனா காலத்தில் குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் பின்தங்கலை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்துகொள்ளவில்லை. 'நீ படி, என்னன்னாலும் பரவால்ல, பார்த்துக்கலாம்!' என்று பெரும்பாலும் எந்தப் பெற்றோருமே சொல்வதில்லை.
ஒரு ரோஜா பூக்க, 50 கிலோ யூரியாவைப் போடுவது சரியா? உலகில் மெதுவாகக் கற்கும் குழந்தை, மிதமாக, விரைவாகக் கற்கும் குழந்தைகள், மாற்றுத் திறன் குழந்தைகள் என்று 4 விதத்தில்தான் குழந்தைகள் இருக்கின்றனர். இதைப் பெற்றோர்கள் ஏற்க வேண்டும்.
முதலில் இப்படிக் குழந்தைகள் இருக்கும் காரணத்தை நாம் ஏற்பதில்லை. கர்ப்ப கால பராமரிப்பு, மூளை கட்டமைப்பு, ஊட்டச்சத்து சரிவிகிதம், சத்துக் குறைபாடு ஆகியவற்றைத் தவறவிட்டு, கணிதத்தில் 100 எடு என்றால், எப்படி? இத்தகைய திணிப்புதான், மாணவர்களிடத்தில் வாந்தியாக வெளியேறுகிறது'' என்கிறார் தேவநேயன்.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாணவர்களுக்குத் தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம் வேண்டும். தொல்லைகள், அவமானங்களை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் அரசு இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. உரிய நடவடிக்கை எடுக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
***
ஆசிரியர்களும் பள்ளிகளும் அரசும் ஊடகங்களும் என்ன செய்ய வேண்டும் என்று கல்வி உளவியலாளர் சரண்யா விளக்கமாகப் பேசினார்.
''ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கினாலும், அது போதாது. அதேபோல உளவியலாளர் சொல்வதைப் புரிந்துகொள்ளவும் பின்பற்றவும் ஆசிரியர்களால் முடியும். ஆனால் உளவியலாளர்கள்போல ஆலோசனைகளை முழுமையாக வழங்கிவிட முடியாது. அதனால், பள்ளிகளில் கட்டாயம் உளவியலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 500 மாணவர்களுக்கு ஓர் உளவியலாளர் இருக்கவேண்டும்.
அரசுப் பள்ளிகளுக்கு, தமிழக அரசு நிறைய வசதிகளைச் செய்துகொடுக்கிறது. ஆனால் மடிக்கணினி, மிதிவண்டிகளை விட மாணவர்களுக்குக் கட்டாயத் தேவை உளவியலாளர்கள் நியமனம் என்பதை அரசு உணர வேண்டும்.
பெற்றோர்களின் பங்கு
குழந்தைகளின் மீது அதிகமான எதிர்பார்ப்பைத் திணிக்கக் கூடாது. தன் குழந்தை குருவியா, குரங்கா, யானையா என்று முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 'நீ மருத்துவர் ஆவாய் என்று நினைத்தேன்!' என்று, சராசரியான குழந்தையைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது. ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்ப்பைத் திணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும்?
இளைஞர், சிறார் நீதிச் சட்டத்தின் படியும் போக்சோ சட்டப்படியும் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், புகைப்படம், பள்ளி, முகவரி உள்ளிட்ட எந்த அடையாளத்தையும் கட்டாயம் பகிரக்கூடாது. அது பிற குழந்தைகளையும் சேர்த்து பாதிக்கும்.
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்குப் பிறகு அதேபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு ஊடகங்களும் முக்கியக் காரணம். போன், தொலைக்காட்சியைப் பார்த்தாலே அதுதொடர்பான செய்திகள்தான் குவிகின்றன. குழந்தைகளின் தற்கொலைகளை உயர்த்திப் பிடிக்கக்கூடாது. அவர்களால் சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதுபோன்ற எண்ணம் ஏற்பட அனுமதிக்கக்கூடாது. 'நானும் இறந்து, சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவேன்' என்று நினைக்க வைக்கக் கூடாது.
சமூக வலைதளங்கள் பயன்பாடு கூடாது என்று சொல்ல மாட்டேன். ஆனால் பயன்பாட்டைக் குழந்தைகள் குறைத்துக்கொள்ள வேண்டும். அவை உங்களின் நேரத்தைத் தின்பதை உணரவேண்டும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணி நேரம், 45 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்துவேன் என்று வரையறுத்து, பயன்படுத்த வேண்டும்.
என்ன நடந்தாலும் வாழலாம்
இறுதியாக எல்லோருக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். இந்தக் காரணத்தால் இறந்துபோகலாம் என்று உலகில் ஒரு காரணம் கூடக் கிடையாது. என்ன நடந்தாலும் வாழலாம் என்னும் தைரியம் ஒவ்வொரு மாணவருக்கும், இளைஞர்களுக்கும்.. அனைவருக்குமே வர வேண்டும். நாம் இறந்துவிட்டால், நமது குடும்பத்தினரைப் பிறர் எப்படி நடத்துவர் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
சக மாணவர்களில் யாராவது தனிமையாக, சோர்வாகக் காணப்பட்டால், அவர்களிடம் சென்று பேசி ஊக்கப்படுத்த வேண்டும். தயக்கமின்றி 1098 என்ற எண்ணை, எந்த நேரத்திலும் அழைத்துப் பேசலாம்'' என்கிறார் மருத்துவர் சரண்யா.
சிநேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் என்ன சொல்கிறது?
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவை தற்காலிகமானவையே. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது என்கிறது சிநேகா தற்கொலை தடுப்பு உதவி மையம். இதுகுறித்துப் பேசிய மைய உறுப்பினர், '' எங்கள் மையத்தில் இங்கு உளவியல் ஆலோசனை (Counselling) அளிப்பதில்லை. அழைப்பவர்கள், தங்களின் பிரச்சினைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் (Sharing). சென்னை மையத்தில் 45 பேர் பணிபுரிந்து வருகிறோம்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், நீட், யூபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோர் எங்களுக்கு அழைத்துப் பேசுகின்றனர். தேர்வுக்கு முன்பும், பின்பும் எங்களுக்கு நிறைய அழைப்புகள் இருக்கும். அறிமுகமே இல்லாத ஒருவர், தன்னுடைய பிரச்சினைக்குக் காது கொடுத்துக் கேட்க அக்கறையுடன் காத்திருக்கிறார் என்ற எண்ணமே எங்களுக்கு அழைத்துப் பேசுவர். அவர்களைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து திசைதிருப்புவதுதான் எங்களின் பணி'' என்று தெரிவித்தார்.
பள்ளி பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம் என்கிறார் தேவநேயன். ''பெற்றோர்கள், தனியார் பள்ளியில் அடுக்குமாடிக் கட்டிடம் இருக்கிறதா, கண்ணாடி மாளிகை உள்ளதா, அபாகஸ், கணினி வகுப்புகள் உள்ளதா என்று பார்க்கும் முன், பள்ளி பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களால் அணுக முடிந்தவர்களாக... குழந்தை நேயத்துடன் இருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். கூடுமானவரை குழந்தைகளை பள்ளி விடுதியில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஆசிரியர்கள் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்
1980, 90களில் படிப்பை முடித்துவிட்டேன் என்று ஆசிரியர்கள் இருக்கக்கூடாது. தங்களை அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும். மாணவர்கள் 1000 தவறான தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது ஆசிரியர்களுக்குத் தெரிவதில்லை. ஆசிரியர்களுக்கு அன்று என்ன நடக்கிறதே என்பதே தெரிவதில்லை.
பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கும் அரசு, அதைத் தொடர்ந்து கண்காணிப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். அரசு, தனியார் பள்ளிகளில் கண்காணிப்புத் திட்டத்தை அறிமுகம்செய்ய வேண்டும். திட்டமிடாத, திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். அந்தக் காலத்தில் ஒரு வட்டாரக் கல்வி அலுவலரின்கீழ் 30 பள்ளிகள் இருந்தன. இப்போது சுமார் 175 பள்ளிகள் உள்ளன. அவற்றைத் தலா இரண்டு முறை சோதனையிட்டால்கூட ஓராண்டு ஆகிவிடும். ஆனால் ஆண்டு முழுவதும் சோதித்துக்கொண்டே இருக்க முடியுமா? பள்ளிகளில்ஏதாவது நடந்த பிறகு, அங்கு சென்று பார்வையிடாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.
குழந்தை பாதுகாப்புக் கொள்கை - கட்டாயம்
பள்ளிகளில் குழந்தை பாதுகாப்புக் கொள்கையை (Child Protection Policy) கட்டாயம் அமல்படுத்த வேண்டும். பள்ளிக்கு உள்ளே வருபவர்கள் யார், கட்டிடத்தின் நிலைத்தன்மை, பள்ளிக்கு வெளியே அழைத்துச்செல்லும்போது பாலியல் வன்முறை, விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு, ஆசிரியர்களின் அணுகுமுறை என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விவாதித்து, தீர்வுகளைத் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இதற்காகத் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழந்தை பாதுகாப்பு குழுக்களை உருவாக்க வேண்டும். இப்படி ஒன்று இருக்கிறது என்பதை பள்ளி அறிவிப்புப் பலகையில் ஒட்டிவைக்க வேண்டும்.
1098, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு எண் ஆகிய எண்களைத் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும். பள்ளிகளில் புகார் பெட்டிக்கு பதில், ஆலோசனைப் பெட்டியை, சிசிடிவி கேமரா இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். எல்லோரின் முன்னிலையிலும் அதைத் தலைமை ஆசிரியர் திறந்து பார்க்க வேண்டும். அப்போது குழந்தைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் உடனிருக்க வேண்டும். பாடங்களுடன் வாழ்க்கைத் திறனுக்கான கல்வியையும் ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துக
பள்ளிகளுக்கெனத் தனித்த, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedures) உருவாக்கப்பட வேண்டும். என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது, பள்ளிகளில் நடக்கும் சம்பவத்துக்கு யார் பொறுப்பு, விடுதியில் என்னென்ன இருக்க வேண்டும்? உதவி எண்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை அவை கொண்டிருக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை மட்டுமல்லாது, சமூக நலத்துறை, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகளின் வழிகாட்டலுடன் இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
பள்ளிகளில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முயலாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் தொடர்ந்து சமூகத் தணிக்கை செய்ய வேண்டும்'' என்கிறார் குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன்.
எல்லாவற்றையும்விட குழந்தைகளின் உயிர் முக்கியம். அவர்களின் எதிர்மறை எண்ணங்களுக்கு விடை கொடுப்பதில், அரசு, பள்ளி, பெற்றோர், ஊடகங்கள் என அனைத்துக்கும் கூட்டுப் பங்கு உள்ளது. இதை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டியது அவசர, அவசியம்.