Higher Education Reservation: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி உள்ளிட்டோருக்கான இடங்கள் பொதுப்பிரிவினரால் நிரப்பப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய அரசு நிராகரிப்பு:


உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அறிவிப்பிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்களில் தகுதியானோர் இல்லாவிடில், பொதுப்பிரிவினரை கொண்டு அந்த இடங்களை நிரப்பலாம் என யுஜிசி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் சதி என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்புக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்களில், குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பான அறிவிப்பில், ”மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடத்தில் இடஒதுக்கீடு) சட்டம், 2019ன் படி, ஆசிரியர் பணியிடத்தில் நேரடி ஆட்சேர்ப்பில் உள்ள அனைத்துப் பணிகளுக்கும் மத்திய கல்வி நிறுவனங்களில் (CEI) இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, எந்த இட ஒதுக்கீடும் ரத்து செய்யப்படவில்லை. எனவே,  2019 சட்டத்திதை காலியிடங்களை நிரப்புமாறு” கல்வி அமைச்சகம் அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவுகளை வழங்கியுள்ளது.






பல்கலைக்கழக மானியம் சொன்னது என்ன? 


முன்னதாக கடந்த டிசம்பர் 27 அன்று உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs ) தாழ்த்தப்பட்ட சாதி (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை (OBC) சேர்ந்தவர்களுக்கான  இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது. அதில், போதுமான தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாவிட்டால்,  இட ஒதுக்கீடு இடங்களை பொதுப்பிரிவினர கொண்டு நிரப்பலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது, இடஒதுக்கீட்டை ரத்து செய்வதன் மீது பொதுவான தடை இருந்தாலும், பொதுமக்களின் நலன் கருதி குரூப் ஏ பிரிவில் வெற்றிடம் இருப்பதை தவிர்க்க இடஒதுக்கீட்டை ரத்து செய்யலாம் என வலியுறுத்தி இருந்தது. இதற்கு எழுந்த கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து தான், மத்திய அரசு அந்த வழிகாட்டுதல்களை நிராகரித்துள்ளது.