மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது ஏன் என்று இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு பயந்து வராமல் இருக்கிறார்களா? அல்லது வேறு காரணங்களா என்று மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாணவர்களின் தேர்வு தேதிகளை மாற்றும் திட்டம் இதுவரை இல்லை. 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை.


பள்ளிகளுக்கு விடுமுறை


வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத் துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.


12ஆம் வகுப்பு தமிழ் பொதுத் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதாமல் இருந்துள்ளனர்.அதற்கு குடும்ப சூழ்நிலை அல்லது தேர்வு பயம் காரணமா அல்லது 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு  என 2 பொதுத் தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமா என்பது குறித்து ஆராயப்படும். அதிகமாகத் தேர்வு எழுதத் தவறிய மாணவர்கள் உள்ள கிருஷ்ணகிரி, கரூர்,தர்மபுரி மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


அடுத்து வரும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


பின்னணி என்ன?


நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா வகை H3N2 காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால் கடந்த 2 வருடங்களாக பரவக்கூடிய மழைக்கால காய்ச்சல் குறைவாக இருந்தது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் முகக் கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், கூட்ட நெரிசல்களில் செல்வதாலும், எல்லா பக்கமும் சாதாரண வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.


இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மார்ச் 16 முதல் 26ஆம் தேதி இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. எனினும் புதுச்சேரியை போன்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை என்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.