தமிழ்நாட்டில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சலை அடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:


''தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் எச்1என்1, சளிக் காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்கள் வேகமாகப் பரவி வருகின்றன.  நடப்பாண்டில் இந்த வகைக் காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.


இன்னொரு புறம் டெங்கு காய்ச்சலும் வேகமாகப் பரவி வருகிறது.  எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்!


தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்?  என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்!


குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத்தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது.  குழந்தைகளைக் காக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை,  9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்க வேண்டும்’’.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 




முன்னதாக, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சிறியவர், பெரியவர் என அனைத்து தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையை சமாளிக்க புதுச்சேரி சுகாதாரத்துறை புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியிலும், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும், காய்ச்சலுக்கான பிரத்யேக வெளிப்புற சிகிச்சையும், உள்புற சிகிச்சை வார்டும் 24 மணிநேரமும் தற்போது இயங்கி வருகிறது. இந்த சிகிச்சைக்காக போதுமான டாக்டர்களும், மருந்துகளும் இருக்கிறது. அதுமட்டுமின்றி ஆரம்ப சுகாதார மையங்களிலும் காய்ச்சலுக்கான பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலில் புதுச்சேரியில் பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று (செப். 17ஆம் தேதி) முதல் 25ஆம் தேதி வரை, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சலை அடுத்து, இங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.