தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளான பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.


முன்னதாக, தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட சூழலில் உயர்கல்விக்கான பணிகள் விரைவாக தொடங்கப்பட்டது. இதையடுத்து, பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக இணையவழி மற்றும் அஞ்சல் வழி மூலமாக கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 24-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.




பொறியியல் படிப்பில் சேர்வதற்காக 2 ஆயிரத்து 426 விளையாட்டு வீரர்கள் உள்பட 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். பின்னர், மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் செய்யப்பட்டு, மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.


இந்த நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது. பின்னர், மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது. மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது போல, பொறியியல் படிப்பிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட உள்ளது.


இதன்படி, வரும் 17-ந் தேதி தொழிற்கல்வி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு வரும் 24-ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெற உள்ளது. விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கான வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் 17-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது.




பின்னர், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு 24-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 24-ந் தேதி முதல் அக்டோபர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு வரும் அக்டோபர் 19-ந் தேதி முதல் வரும் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர், அருந்ததியர் ஒதுக்கீட்டிற்கான இடங்களில் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிட மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் 24 மற்றும் 25-ஆம் தேதி ஆகிய தேதிகளில் இணையவழியில் நடைபெற உள்ளது.


மேலும் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் படிக்க : ஆடிட்டர் தேர்வில் அசத்திய அண்ணன்... தங்கை... தேசிய அளவில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி!